காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும் வேலைநாடுநர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறியது, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ் நாடு நகர்ப்புற, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் செப்.21 ஆம் தேதி நடத்த இருக்கின்றன. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.


இம்முகாமில் ஹூண்டாய், டிவிஎஸ் மற்றும் மதர்சன், அசோக்லைலேண்ட், சுதர்லேன்ட், பிளக்ஸ்டிரானிக்ஸ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது மனிதவள தேவைக்கான நேர்முகத் தேர்வினை நடத்தவுள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் 10,12 ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போட் அளவிலான புகைப்படத்துடன் வரும் செப்.21 ஆம் தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு 044}27237124 அல்லது 044}27238894 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டார்.