விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (23.12.2023) துவக்கி வைத்து, தேர்வுபெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், முதல்வர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றால்தான் தமிழ்நாடு தொழில்துறையின் வளர்ச்சி பெறும் என்பதை நன்கு அறிந்து தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித்தரும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் 03 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிடப்பட்டது. தற்பொழுது வரை இரண்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றது. அந்த வகையில் இன்றைய தினம் 03-வதாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.


தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட 25 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. முகாம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், மாதந்தோறும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாய்ப்பு பெற்றுள்ள 1,115 நபர்கள் வேலை வாங்கினர். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறனுக்கேற்ற பிடித்த வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திட வேண்டும்.


முதல்வர் ஒவ்வொருவரும் தங்கள் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் மூலம், மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று வெளியே வரும் மாணவர்கள் வேலை வாய்ப்பினை எளிதான பெற்றிடும் வகையில் துறை சார்ந்த திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, துறை சார்ந்த படிப்பிற்கு தேவையான பயிற்சிகளை மாணவ, மாணவியர்கள் பெறுவதால் வேலை வாய்ப்பும் எளிதாக கிடைக்கப்பெறும் நிலை உருவாகியுள்ளது. மேலும், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், நிரல் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் அரசுத்துறை பிரச்சனைகள் மற்றும் சிக்கலை தீர்வு காண்பதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு மாணவர்களின் திறன் வளர்க்கப்பட்டு வருகிறது.


 விழுப்புரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்புத்துறையின் மூலம், அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தற்பொழுதுவரை 292 நபர்கள் பல்வேறு அரசுப் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பினை பெற்றுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்கள் எவரும் மனம் தளரவிடாமல் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு அடுத்து நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்கள்,


வேலையில் முழு கவனம் செலுத்தி தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு, தங்கள் வாழ்வில் மென்மேலும் வளர்ச்சியடைவதோடு, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற நிலைக்கு தொழில்முனைவோர்களாக உருவாகிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.