சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


"தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி  நியமனம் பெற்று வருகின்றனர்.


நாளை வேலைவாய்ப்பு முகாம்:


சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையங்களும்  இணைந்து  15.03.2024  (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?


இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை,  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.  இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.


இளைஞர்களுக்கு அழைப்பு:


இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.