TNPSC Group 4: கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV தொகுதி IV பணிகள்)டன் தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பென் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 07.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட (6) ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு விவரம்:
குரூப் 4 தேர்வு எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களில் அதி விரைவாக வெளியிடப்பட்டன. அதாவது கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் தான் கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆவண சமர்பிப்பு நாளை தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தட்டச்சு / சுருக்கெழுத்து சான்றிதழில் தேர்வு முடிவுகள் வெளியிட்ட தேதி அறிவிக்கை தேதிக்குப் பின்னால் இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவித்ததும் குறிப்பிடத்தகக்து.