TNPSC GROUP 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுளது. தேர்வு முடிந்த 4 மாதத்திற்குள் முடிவுகள் வெளியாவது இதுவே முதல்முறையாகும். 


டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு முடிவுகள்:


குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.  இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் தேர்வு நடைபெற்ற நான்கு மாதங்களில் டிஎன்பிஎஸ்சி முடிவுகள் வெளியாவது முதல்முறையாக இருக்கும்.


நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்:


கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், வனக்காவல், வனக் கண்காணிப்பாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர்உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நடத்தப்பட உள்ளன. அதேநேரம், காலிப்பணியிடங்களை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்புகள் ஜூன் 18ஆம் தேதி வெளியாகின.


டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் சொல்வது என்ன?


இதனிடையே, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் சில தினங்களுக்கு முன்பு ஏபிபி நாடுவுக்கு அளித்த பேட்டியில், “இப்போது டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். குரூப் 4 தேர்வு தாள்களைத் திருத்தும் பணி மிகவும் பெரியது என்பதால் சற்றே தாமதமாகிறது. இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம். அந்த வகையில் விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்” என தெரிவித்து இருந்தார். அந்த வகையில் அடுத்த ஓரிரு தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.