எழுத்தர் / உதவியாளர் காலிப்பணியிடங்கள்
விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் நடத்தப்படும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை கொண்டு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு கடன்சங்கங்கள், கூட்டுறவுநகர வங்கிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் காலியாக உள்ள எழுத்தர் / உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனிஅறிவித்துள்ளார்.
கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகரவங்கிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் காலியாக உள்ள எழுத்தர் /உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 10.11.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://drbvpm.in/என்ற இணையதளம் வழியாக (through online only) மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு 24.12.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.
கல்வித்தகுதி
இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த்மேத்தா தேசியகூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 ஆம் ஆண்டு நேரடி பயிற்சி /அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சிக்கு (Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரியசான்று /கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இது தொடர்பான விரிவான விவரங்கள் விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் ( https://drbvpm.in/ ) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
மேலும் விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்கு 23-வது அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சிக்கான (Diploma in Cooperative Management) சேர்க்கை 10.11.2023 முதல் 30.11.2023 வரை நடைபெறுகிறது. இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதளம் வழி பெறப்படுகிறது. இணையதளம் வழி 30.11.2023 பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் நடத்தப்படும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர்ந்து கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.