காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு, இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தினை இங்கே காணலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலிப் பணியிடங்கள் அறிவிக்க உள்ளன. இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 6,556 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 3,587 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
வகுப்புகள் நடைபெறும் விவரம்:
இப்பயிற்சி வகுப்புகள், வரும் 21-ல் தொடங்க உள்ளது. இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 3,559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, வரும் 18 முதல், செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 31-ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
தேர்வு முறை எப்படி?
எழுத்துத் தேர்வு- 70 மதிப்பெண்கள் (தமிழ் மொழி தகுதித் தேர்வும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதன்பிறகே எழுத்துத் தேர்வு நடைபெறும்.)
உடல் தகுதித் தேர்வு- 24 மதிப்பெண்கள்
சிறப்புத் தேர்வு - 6 மதிப்பெண்கள்
தேர்வுக் கட்டணம்
தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250 தொகையைச் செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கி இ- சலானாகவோ ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட விவரங்களை விரிவாக அறிய: https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு பாடத்திட்டங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/syllabus.pdf என்ற இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
முழு விவரங்களுக்கு: https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf