இந்தியாவில் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 603 மில்லியன் டாலா் மதிப்புக்கு மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் சீனாவில் இருந்து மட்டும் 311 மில்லியன் டாலா் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர மலேசியா, ஜொ்மனி, இத்தாலி, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு அதிக அளவில் மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவில் இருந்து குறைந்த விலையில் அதிகஅளவிலான மரச்சாமான்கள் இறக்குமதியாவது, உள்நாட்டில் மரச்சாமான் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதனை கருத்தில் கொண்டு மரச்சாமான்கள் உற்பத்தியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. உலகிலேயே மரச்சாமான் ஏற்றுமதியில் சீனாதான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக முதல்வர் நாட்டில் முதல்முறையாக அறைகலன் பூங்கா தூத்துக்குடியில் அமைக்கப்படும் என அறிவித்து உள்ளது உள்நாட்டு மரச்சாமான்கள் உற்பத்தியாளர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்று உள்ளது. தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்கு துறைமுகம் அமைந்திருப்பதால் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. துறைமுகம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை, ரயில் போத்துவரத்து என நான்கு வழித்தட வசதிகளும் இருப்பதால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இந்த தேக்க நிலையை போக்கி பல்வேறு புதிய தொழிற்சாலைகளை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதி தான் தூத்துக்குடி சர்வதேச பர்னிச்சர் பூங்கா திட்டம். நடந்து முடிந்துள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சிப்காட் நிறுவனம் மூலம் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சிப்காட் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பர்னிச்சர் தொழிலுக்கு என நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த மையம் அமைகிறது. மர அறவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்த பூங்காவில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டில் உள்ள முன்னணி பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இங்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. பர்னிச்சர் உற்பத்தி தொடங்கி பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரையிலான அனைத்து நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம் பெறுகின்றன. மேலும், பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டு தோறும் சுமார் 5000 பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சிக் கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்ரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம் பெறும். இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
நாட்டில் மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மியான்மர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து மரத்தடிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இவைகள் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மர அறவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகளை கொண்டு இங்கேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழதத்தில் கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள யூகாலிப்டஸ் மரங்கள், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள மலை வேம்பு, திண்டுக்கல் மற்றும் நீலகரி மாவட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் போன்ற மரங்களை பயன்படுத்தும் வகையிலும் இந்த அறைகலன் பூங்கா (பர்னிச்சர் பூங்கா) அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் போது தூத்துக்குடி பகுதி மிகுந்த வளர்ச்சியை பெறும். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என அதிகாரிகள் என்கின்றனர்.