தமிழக அரசில் மீன்வளத்துறையின் கீழ் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தமிழில் எழுத, படிக்கத்தெரிந்திருப்பதோடு மீன்பிடி வலைகளைக் கையாள்வதில் தேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற தகுதிகள் உள்ளன.


தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது தமிழக மீன்வளத்துறை. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாராம்பரிய மீனவர்களின் உரிமைகளை பாதுகாத்துதல் போன்ற பல்வேறு மீனவப் பிரச்சனைகளை சரிசெய்து வருவதிலும் இத்துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இதனை நிர்வகிக்க பல்வேறு துறைகளின் கீழ் அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவரும் நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மீன்வள உதவியாளர் காலியாக உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காலியாக மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது எனவும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் , தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதனன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் மீன்வள உதவியாளர்  பணி காலியாக உள்ளது எனவும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலும் மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் கண்டிப்பாக நீச்சல், மீன்பிடித்தல், வலைப்பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சு வலைப்பயன்படுத்துதல், வலை வீசுதல் மற்றும் அறுந்த வலைகளை  சரி செய்யத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவிப்பில் கூறியுள்ளார். இதோடு மீன்வளத்துறையின் மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்போருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஜனவரி1, 2021 நிலவரப்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவுக்கு 35 வயது எனவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது, இதர பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற தகுதியினைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:



இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட தகுதியும் , ஆர்வமும் இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஜாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் மீன்வளம் ம்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கதவு எண் 5-3, கார்ப்பரேஷன் மாடியில், பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை- 630 561 ( தொலைப்பேசி எண்- 04575 -240848) என்ற  முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் மறக்காமல், விண்ணப்ப உறையின் மேல் சிவகங்கை மாவட்ட மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என எழுதி அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.