படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக் கிழமை 15.11.2024 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
செங்கல்பட்டு வேலைவாய்ப்பு முகாம்
இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
மேலும் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களை தேர்ந்தெடுக்கும் வேலையளிப்பவர்களும் கலந்துகொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் மற்றும் இம்முகாமில் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
வயது வரம்பு என்ன ?
வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 15.11.2024 வெள்ளிக் கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 2.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933 / 9486870577 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.