செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஒசூர் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்


செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய இரண்டு தினங்களில் (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தரைத்தளம் டி பிளாக்கில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.


வேலைவாய்ப்பு முகாம் 


இவ்வேலைவாய்ப்பு முகாமில் பன்னிரெண்டாம் வகுப்பு / பட்டப்படிப்பு (கலை மற்றும் அறிவியல் பிரிவு) தேர்ச்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்ற 19 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளம் ரூபாய்.19,629/-ம், உணவு தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.


15 மாதங்கள் பயிற்சி


இப்பணிக்காலியிடங்கள் முழுமையும் பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. சுயவிவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றிதழ்கள் நகல்கள், ஆதார் அட்டை நகல்  மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.  


செய்ய வேண்டியது என்ன ?


மேலும் விவரங்களுக்கு 044-27426020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வேலைநாடுநர்கள் பெருமளவில், கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தெரிவித்துள்ளார்.