மத்திய கல்வி அமைச்சகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அழைப்பு விடுத்துள்ளது.

Continues below advertisement


ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள தேர்வர்கள், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விரிவான தகவல்களைப் பெறலாம்.


எனினும் இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் உயர்ந்த அளவிலான திறமை, நேர்மை, ஒழுக்கம் மற்றும் நிறுவன அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்னென்ன தகுதி?


பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது புகழ்பெற்ற ஆராய்ச்சி அல்லது கல்வி நிர்வாக அமைப்பில் 10 ஆண்டுகள் அனுபவம், மற்றும் கல்வித் தலைமைத்துவத்தை நிரூபித்த ஒரு சிறந்த கல்வியாளர் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் விண்ணப்பதாரரின் வயது 65 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.


ஊதியம் எவ்வளவு?


இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபருக்கு மாதம் ரூ.2,10,000 சம்பளம் வழங்கப்படும். இத்துடன் ரூ. 11,250 சிறப்பு அலவன்ஸ் மற்றும் பிற வழக்கமான படிகளும் வழங்கப்படும்.


தேர்வு முறை எப்படி?


பல்கலைக்கழக சட்டத்தின் விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு குழு பரிந்துரைக்கும் பெயர்ப் பட்டியலில் இருந்து, துணை வேந்தர் நியமனம் செய்யப்படுவார்.


விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 8, 2025. அதற்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது. கூடுதல் விவரங்களை https://www.education.gov.in மற்றும் https://cutn.ac.in ஆகிய வலைத்தளங்களில் காணலாம்.


இந்திய அரசு 2009-ல் நாடாளுமன்றச் சட்டம் மூலம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. இந்த பல்கலைக்கழகம் மற்ற எட்டு மத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.