Amazon Layoff: அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, செலவை குறைக்க திட்டமிட்டுள்ளதாம்.
30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்
அமேசான் நிறுவனம் தங்களது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், சுமார் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாம். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறதாம். அதன்படி, நிறுவனத்தின் சுமார் 3.5 லட்சம் கார்ப்ரேட் ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவிகிதம் பேரை ஒரே அடியாக வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஒரே அடியாக 27 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம், அதன் பிறகு மேற்கொண்டுள்ள மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவாகும். தொழில்நுட்பத்துறையை சார்ந்த நிறுவனங்களின் பிரிவில், குறைந்தபட்சம் கடந்த 2020ம் ஆண்டிற்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கையாகவும் அமேசானின் முடிவு அமைந்துள்ளது.
அமேசானின் எந்தெந்த பிரிவில் பணிநீக்கம்
டீம் மேனேஜர்களுக்கு 27ம் தேதியன்று தகவல் அளிக்கப்பட்டு, 28ம் தேதி காலை முதல் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு, பணி நீக்கம் தொடர்பான மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறதாம். கடந்த இரண்டு வருடங்களாகவே அமேசான் நிறுவனம் சீரான எண்ணிக்கையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த புதிய பணி நீக்க நடவடிக்கையானது பல்வேறு பிரிவுகளைச் சாந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் என கூறப்படுகிறது. குறிப்பாக,
- HR பிரிவு
- ஆப்ரேஷன், டிவைசஸ், சர்வீசஸ்
- அமேசன் வெப் சர்வீஸ் ஆகிய பிரிவுகள் அடங்கும்.
ஆட்குறைப்புக்கான காரணம் என்ன?
கொரோனா தொற்று பரவலின்போது ஏற்பட்ட உச்சக்கட்ட தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான பணியமர்த்தலை ஈடுசெய்வதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் HR பிரிவு 15 சதவிகிதம் வரை பணி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என ஃபார்ட்சூன் நிறுவனம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவை நாடும் அமேசான்
நிறுவனத்திற்குள் அதிகாரத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்ற தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியின், நடவடிக்கைகளுடன் இந்த பணிநீக்கங்கள் ஒத்துப்போகின்றன. இதில் மேலாளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். செயற்கை நுண்ணறிவு (AI) மீதான அதிகரித்த நம்பிக்கை, மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளை தானியக்கமாக்குவதன் மூலம் மேலும் வேலை குறைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று ஜாஸ்ஸி சூசகமாக தெரிவித்துள்ளார்.
நிறுவன ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாய விதியை அமல்படுத்தினர். அதன் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யவில்லையாம். இதனால் நிர்ணயித்த எண்ணிக்கையை அடைய நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம். அவசியமாகின்றன.
நிறுவன மறுசீரமைப்பு இருந்தபோதிலும், அமேசான் விடுமுறை காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. அதன் கிடங்குகளில் பணியாளர்களை நியமிக்கவும், எதிர்பார்க்கப்படும் பருவகால தேவையை கையாளவும் 250,000 பருவகால வேலைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாம்.