தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், 1,450 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதற்கு இன்று முதலே விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கிராம ஊராட்சி செயலர் பணி

கிராம ஊராட்சி செயலர் என்பது, கிராம ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது, கிராம ஊராட்சிக்கு வரும் அரசாணைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவது, கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளை உள்ளடக்கிய பணியாகும்.

தமிழ்நாடு முழுவதும், 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சிகளின் முழு நிர்வாகப் பணிகளை கவனித்து வருகின்றனர். குறிப்பாக, தலைவர், உறுப்பினர்களுக்கு துணையாக இருந்து, ஊராட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்கின்றனர்.

Continues below advertisement

அதோடு, மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துதல், குடிநீர், தெரு விளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த அரசு திட்டங்களை மேற்பார்வையிடுவதோடு, வரி வசூல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் அரசுப் பணியாளராக செயல்பட்டு வருகின்றனர்.

நிரப்பப்படும் காலி பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்.? தகுதி என்ன.?

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்ளாட்சித் துறை.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  இந்த பணிக்காக விண்ணப்பிப்பவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதன்பின்னர், 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பயிற்சி) ஆகியோர் அடங்கிய குழு நேர்காணல் நடத்தும்.

தொடர்ந்து, டிசம்பர் 16-ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு, 17-ம் தேதி பணி ஆணைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்..