World Hypertension Day 2022:


உயர் ரத்த அழுத்தம் என்பது எப்போதுமே நம் ரத்த அழுத்தத்தின் அளவு 140/90 என்றளவில் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம் தனிப்பட்ட ஒரு நோயாக கவனம் பெறுவதைவிட அதனால் மாரடைப்பு ஏற்படலாம், பக்கவாதம் ஏற்படலாம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம் என்பதனால் அதிக கவனம் பெறுகிறது.


இதில் இன்னொரு கவலை கொள்ளும் விஷயம் என்னவென்றால் உயர் ரத்த அழுத்தம் பெறும்பாலும் ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்படுகிறது. சரி, உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம். அதிக மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை ஆகியனவையே உயர் ரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கின்றன. 


இந்த தவறான பழக்கவழக்கங்கள் கூடாது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக உயர் ரத்த அழுத்த தினமானது மே 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் நிகழும் அகால மரணங்களுக்கு பெரும் காரணமாக இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 1.13 பில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.






உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கையாள்வது?
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் வாழ்க்கை முறையையும் மாற்றியமைப்பது முக்கியம். அதில் உங்கள் அன்றாட உணவுப் பழக்கங்களும் அடங்கும். அதேபோல் மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை கைவிடுவது சிறந்தது.


நிபுணர்கள் பலரும், உப்பைக் குறைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். பொட்டாசியம் சீராக உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக் கூடிய 5 உணவு வகைகளைப் பார்ப்போம்:


1. வாழைப்பழம்: 
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. 100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் இருக்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் மில்க் ஷேக், ஸ்மூத்தி என்றும் உருவாக்கி சாப்பிடலாம்.


2. கொய்யாப்பழம்:
கொய்யாப் பழத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது என்பது ரத்த அழுத்தம் உயராமல் காப்பதுடன் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை பாதுகாப்பதுடன் எலக்ட்ரோலைட்ஸையும் கொடுக்கிறது.


3.தக்காளி:
தக்காளிக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மகத்துவம் நிறைவாக உள்ளது என்று ஆய்வுகள் பல கூறுகின்றன. அதை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். இல்லாவிட்டால் சாறுபிழிந்தும் சாப்பிடலாம்.


4. வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதை உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட வேண்டும். இது உடலில் நீர்ச்சத்தை பேணுகிறது.


5. பூண்டு:
பூண்டு என்பது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு மாயாஜால உணவு என்றே கூறலாம். பூண்டில் உள்ள கூறுகள் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதை பச்சையாகவும் சாப்பிடலாம் பவுடராக்கியும் சாப்பிடலாம்.