கொரோனா தடுப்பூசி குறித்து இன்னும் பல சந்தேகங்கள் இருக்கும் சூழலில், வெவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை மாற்றி மாற்றி போட்டுக் கொள்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். மேலும் இது குறித்த முறையான ஆய்வுகள் ஏதுமில்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார். கொரோனாவை எதிர்க்கும் ஒரே ஆயுதமாக பார்க்கப்படுவது தடுப்பூசி மட்டுமே. ஆனால் அது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நோய் எதிர்ப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் சில நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி ஒரு நிறுவனத்தினுடையதாகவும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வேறொரு நிறுவனத்தினுடையதாகவும் போடப்படுகிறது. இது போன்று மாற்றி மாற்றி போட்டுக்கொள்ளும் தடுப்பூசி மிக்சிங் முறைக்கு இந்தியாவிலும் கூட கேள்விகள் எழுந்தன. ஆனால் இதுவரை அதற்கு எந்த ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தடுப்பூசிகளை மாற்றி போட்டுக் கொள்ளும் முறை பற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா “தடுப்பூசிகளை மாற்றி போட்டுக் கொள்ளும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் அது குறித்த உரிய தகவல்களும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை எப்போது போட்டுக் கொள்வது, எந்த நிறுவன தடுப்பூசியை போட்டுக் கொள்வது என்பது குறித்து மக்களே முடிவெடுப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி முடிவெடுக்கும் நிலையில் தேவையற்ற சிக்கலை மக்களே உருவாக்க வாய்ப்பிருப்பதாகவும் சௌமியா கூறியுள்ளார்.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மாற்றி மாற்றி போடும் முறை, அதில் கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து எந்த முறையான ஆய்வுகளும் இல்லை. அப்படி இருக்கும் போது நம்மிடம் போதிய தரவுகளோ, பலனளிக்கும் கண்டறிதல்களோ இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி உருவாக்க கவனம் செலுத்தின. அதன்படி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஸ்புட்னிக் வி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டாலும் அவை இரண்டும் ஒரே நிறுவனத்தின் தடுப்பூசிகளாக இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அறிவுரை. இப்போது வரை இந்தியாவில் மிக்சிங் இல்லை. ஆனால் கனடா, ஜெனிவா போன்ற இடங்களில் இந்த மிக்சின் குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனாவுக்கு எதிரான ஒவ்வொரு தடுப்பூசியும் செயல்படும் விதம் வித்தியாசமானது. தடுப்பூசிகளை மிக்சிங் முறையில் போட்டுக் கொள்ளும் போது அவை செயல்படும் விதத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் அல்லது செயல்பாட்டை குறைக்கலாம். இதனை கருத்தில் கொண்டே இம்முறை பெரும்பாலான நாடுகள் ஊக்குவிப்பதில்லை.