சாக்கலேட் சாப்பிட்டால் சால்மோனெல்லா பாக்டீரியா பரவுகிறதாம். உலக சுகாதார நிறுவனமே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும் குறிப்பாக பெல்ஜியத்தில் தயாரான சாக்கலேட்டுகள் மூலம் 113  நாடுகளில் இந்நோய் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவகை குடல் அழற்சி நோய். பொதுவாகவே இது கெட்டுப்போன உணவு, அசுத்தமான தண்ணீர் மூலமே பரவுகிறதாம்.


இந்த நோய் குறித்து டெல்லி தர்மஷீலா நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் கவுரவ் ஜெயின் கூறும்போது, "சால்மோனெல்லா தொற்று அல்லது சால்மோனெல்லோசிஸ் என்பது மனிதர்களின் குடல்களைத் தாக்கும் சாதாரண பாக்டீரியா தொற்றாகும். ஆனால் இந்தத் தொற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் நோயின் தீவிரம் பல அபாயகரமான உபாதைகளை ஏற்படுத்தும்" எனக் கூறுகிறார்.


அறிகுறிகள்: சால்மோனெல்லா டைஃபிமிரியம் என்றவகை பாக்டீரியா தான் சால்மோனெல்லோசிஸ் நோயை உண்டாக்குகிறது. இதே பாக்டீரியா தான் டைஃபாய்டு நோயையும் உண்டாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குடலைத் தாக்கியதும் 12 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் அதன் தாக்கத்தை தொடங்கிவிடுகிறது. வாந்தி, பேதி, காய்ச்சல், வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் உண்டாகுகிறது என்று கூறுகிறது மத்திய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்.


இந்த நோய் சாதாரணமாக 4 முதல் 7 நாட்களை வரை நீடிக்கிறது. பெரும்பாலானோர் பெரியளவில் சிகிச்சை தேவைப்படாமலேயே தேறி விடுகின்றனர். ஆனால், சிலருக்கு தீவிர பேதி ஏற்படுகிறது. அவர்களை கண்டிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. சில நேரங்களில் இந்த பாக்டீரியா குடலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது. இது நடப்பது மிகவும் அரிது. ஆனால் அப்படி நடக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது.




யாருக்கு அபாயம் அதிகம்?
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்
65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள்
நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள்.


தடுப்பது எப்படி?
கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இறைச்சியை நன்கு சுத்தம் செய்யுங்கள், செல்லப் பிராணிகளின் மல, மூத்திரத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுங்கள். சுகாதாரமாக இருங்கள்.


சால்மோனெல்லா எந்த மாதிரியான உணவுகளில் எல்லாம் இருக்கிறது?
* சமைக்கப்படாத முட்டை, இறைச்சி
* அன்பாஸ்சரைஸ்ட் அதாவது பாக்டீரியா நீக்கப்படாத பால். பொதுவாக பசும்பால்.
* நன்றாக கழுவி சுத்தப்படுத்தாமல் சமைக்கப்படும் இறைச்சி, கோழி, முட்டை.
* உங்களுக்கு வயிற்றோட்டம், வாந்தி இருந்தால் மற்றவர்களுக்கு சமைக்காதீர்கள்.
* குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவை சரியாக பராமரிக்கவும்.
* உணவை கையாளும் முன் கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
* சமையலறையின் சுத்தத்தை உறுதி செய்யுங்கள்.
* இறைச்சியை சரியான அளவு வேகவைத்து உண்ணுங்கள்.
* செல்லப்பிராணிகளுடன் விளையாண்ட பின்னர் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.