ஆண்களின் உடலில் ப்ராஸ்டேட் சுரப்பி என்றொரு சுரப்பி உள்ளது. இதில் உருவாகும் ’செமினல் ஃப்ளூயிட்’ எனும் திரவம் திரவம் தான் விந்துக்களைக் கடத்த உதவுகிறது. இதை விதைப்பை என்றழைக்கின்றனர். இந்த விதைப்பையில் ஏற்படும் புற்றுநோய், ப்ராஸ்டேட் கான்சர் அல்லது விதைப்பை புற்றுநோய் என அழைக்கப்படுகிறது.
முன்பெல்லாம் வயது முதிர்ந்த ஆண்கள் மத்தியிலேயே அதிகமாக இந்த வகை புற்றுநோய் ஏற்பட்டு வந்த நிலையில், இப்போதெல்லாம் 40 வயது ஆண்கள் முதலே தொடங்கி அதிகரித்துள்ளது. இந்த வகை புற்றுநோய் மிகவும் தாமதமாகவே பாதிப்பை ஏற்படுத்துவதால், இது வெளியே அதிகம் தெரிவதில்லை. இதனால் ஆண்கள் சற்று கவனத்துடனும், இவ்வகை புற்றுநோய் குறித்த புரிதலுடனும் இருத்தல் அவசியமாகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
- அவசரமாக சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படுதல். ஆனால் சிறுநீர் கழிக்கும்போது மிகவும் குறைவாக அல்லது தடைபட்டு தடைபட்டு சிறுநீர் வெளியேறுதல்.
- சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் கூட மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்
- அதுபோல் சிறுநீரில் ரத்தம் கசிந்து வருதல்
- விந்துக்களில் ரத்தம் வருதல்
- எலும்புகளில் வலி ஏற்படுதல்
- உடல் எடை சட்டென வெகுவாகக் குறைதல்
- அடி முதுகுப் பகுதியில் வலி ஏற்படுதல்
- விரைப்புத் தன்மையில் பிரச்சினை ஏற்படுதல் ஆகியன ப்ராஸ்டேட் அல்லது விதைப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
ஆபத்துகள் என்னென்ன?
ப்ராஸ்டேட் அல்லது விதைப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்காக காரணம் இதுதான் என்று மருத்துவ உலகம் இதுவரை திட்டவட்டமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று மட்டும் எச்சரிக்கிறது.
அதுவும் பெற்றோர், உடன் பிறந்தோர் என யாருக்காவது இந்த வகை புற்றுநோய் இருந்தால் உங்களுக்கான ஆபத்து அதிகம் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
அதேபோல் உடல்பருமன் நோய் உள்ளவர்களுக்கும் ப்ராஸ்டேட் அல்லது விதைப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஆண்களே 40 தாண்டினாலே உங்கள் உடல் எடையில் கவனம் செலுத்துங்கள். அது இந்த நோய்க்கு மட்டுமல்ல இதய நோய் தொடங்கி பல நோய்களின் பாதிப்பையும் தவிர்க்க உதவும்.
தடுப்பது எப்படி?
உங்களுக்கு ஒருவேளை ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் இருப்பது போல் ஏதேனும் சந்தேகம் ஏற்படுகிறதா? தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். தயங்காமல் உங்களின் உபாதைகளைச் சொல்லுங்கள்.
காய்கறிகள், கனிகள், முழு தானியங்களை உங்கள் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். கால்சியம் மாத்திரைகளுக்கு பதில் உணவில் கால்சியத்தை சேர்க்க முயற்சியுங்கள்.
டயட் ப்ளானை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது சுறுசுறுப்பாக இருப்பது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியனவற்றை தவறாமல் செய்யுங்கள். இது உங்களின் உடல் எடையைப் பேண உதவும். உடற்பயிற்சிகள் மனதில் ஏற்படும் சஞ்சலங்களையும் தவிர்க்கும்.