பிரபல ஹிந்தி திரைப்படமான டங்கல் படத்தில் நடித்த நடிகை சுஹானி பட்நகர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த படத்தில் பபிதா போகத் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு வயது 19 ஆகும்.


அவர், டெர்மடோமயோசிடிஸ் என்ற அரியவகை நோயுடன் போராடி வந்தார். இந்நிலையில் அவர், பிப்ரவரி 7 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 16 ஆம் தேதி உயிரிழந்தார்.  சுஹானி பட்நாகரின் குடும்பத்தினர், இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் சுமார் 10 நாட்களுக்கு முன் தான் சுஹானிக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.


டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் அதிகாரப்பூர்வ பக்கத்தின்படி, டெர்மடோமயோசிடிஸ் என்பது அரிதான நோயாகும், இது வீக்கம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தும். அடிப்படையில், இது தசைகளின் ஒரு பகுதியில் மட்டுமே வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த அரிய நோய் மற்ற தசை நோய்களிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் டெர்மடோமயோசிடிஸ் தோல் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நோய் எந்த வயதிலும் வரலாம் என்றாலும், இது பெரும்பாலும் 50 முதல் 70 வயதுடையவர்களையே பாதிக்கிறது என தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் அறிக்கை கூறுகிறது. மேலும், ஆண்களை விட பெண்களையே இது அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.  


இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லூபஸ் அல்லது முடக்கு வாதம் போன்ற இணைப்பு திசுக்கோளாறும் ஏற்படலாம். டெர்மடோமயோசிடிஸ் மிகவும் அரிதான நோய் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுஹானி பட்நாகரின் தந்தை சுமித் பட்நாகர் தெரிவித்துள்ளார். இந்த நோய் உலகம் முழுவதும் ஐந்து முதல் ஆறு பேரை மட்டுமே தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.  


உயிரிழந்த நடிகையின் நோய் பற்றி பேசிய அவரது தாயார் பூஜா பட்நாகர், “இரண்டு மாதங்களுக்கு சுஹானியின் கைகளில் சிவப்பு புள்ளிகள் தோன்றியது. நாங்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தோம், ஆனால் அதைக் கண்டறிய முடியவில்லை” என கூறினார். சுஹானியின் தந்தை கூறுகையில், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், கடைசியில் அவரது நுரையீரல் தொற்று மற்றும் அதிகப்படியான திரவம் சேர்ந்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக  தெரிவித்தார்.


சுஹானியின் நிலை மோசமடைந்ததன் காரணமாக அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார் என்றும், இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ அறிக்கையின்படி, டெர்மடோமயோசிட்டிஸின் அறிகுறிகள் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது. உடலில் சூரிய ஒளி படும் இடங்களில் சிவப்பு அல்லது ஊதா நிற தடிப்புகள், வலி ​​அல்லது அரிப்பு, மேல் கண் இமைகளின் வீக்கம், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கால்விரல்களில் ஒரே மாதிரியான நிறப் புள்ளிகள், தோலில் செதில் தோன்றுவது, முடி உதிர்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.