உலர் திராட்சை உடலுக்கு பல்வேறு நன்மைகள் பயக்கக் கூடியது. சித்த மருத்துவம், ஆயுர்வேதத்தில் உலர் திராட்சை ரசம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எப்போதும் போல் அளவுக்கு மிஞ்சினால் என்ற வரையறை உலர் திராட்சைக்கும் இருக்கிறது. உலர் திராட்சை என்பது உடலுக்கு நன்மை பயக்கும் அதுவும் குளிர் காலத்தில் பல்வேறு நன்மைகள் தரும் என்பதில் சந்தேகமில்லை. அடிக்கடி பசி எடுப்போருக்கு உலர் திராட்சை உட்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கக் கூடும்.


உலர் திராட்சைகள் மனதுக்கு நல்ல உத்வேகத்தை தரும். உங்களுக்கு உலர் திராட்சை பிடிக்குமென்றால் நீங்கள் இதை அன்றாடம் முந்தைய இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் பயன்படுத்தலாம். நீரில் ஊறவைத்த உலர் திராட்சைகள் வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்தை உடலுக்கு நிறைவாகத் தரும்.


இதுமட்டுமல்ல உலர் திராட்சை உடலுக்கு இன்னும் பல நன்மைகளை செய்யவல்லது. ஆனாலும் இதனை அளவுக்கு அதிகமாக உண்ணுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஊறவைத்த உலர்திராட்சை தரும் நன்மைகள் என்ன?


ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ்: 


ஹெல்த்லைன் என்ற மருத்துவ இதழின்படி ஊறவைத்த உலர் திராட்சையில்  உள்ள ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் நம் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்ஸிடம் இருந்து காக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கஸ்தான் புற்றுநோயை உண்டாக்குவையாகும். அதுமட்டுமல்ல டைப் 2 சர்க்கரை நோயிலிருந்தும் காக்கிறது. அல்சைமர்ஸ் நோய்க்கு சிறந்த மருந்தாகிறது.


இரும்புச் சத்து: 


ஊறவைத்த உலர் திராட்சையில் நிறைய இரும்புச் சத்து உள்ளது. இது சிவப்பு அணுக்களுக்கு சீராக ஆக்சிஜன் செல்வதை உறுதி செய்கிறது. இரும்புச் சத்து குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். அது ஏற்படாமல் தடுக்கிறது ஊறவைத்த உலர் திராட்சை.


டீடாக்ஸிஃபையர்:


நம் வாழ்க்கைமுறை மோசமாக இருப்பதாலேயே பல்வேறு லைஃப்ஸ்டைல் நோய்கள் நம்மை தாக்குகின்றன. ஊறவைத்த உலர் திராட்சை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. கல்லீரலின் பயோகெமிக்கல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. நம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் ஊறவைத்த உலர் திராட்சை சிறந்த டீடாக்ஸிஃபையராக இருக்கிறது.


கெடுபலன்கள் என்னென்ன?:


உடல் எடை அதிகரிப்பு: 


ஊறவைத்த உலர் திராட்சையால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. காரணம் மற்ற எல்லா பழங்களையும் ஒப்பிடும்போது ஊறவைத்த உலர் திராட்சையில் அதிகமான கலோரிக்கள் உள்ளன. இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம். உடல் எடை அதிகரிக்கக் கூடாது என நினைப்பவர்கள் ஊறவைத்த உலர் திராட்சையை அன்றாடம் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.


வயிறு கோளாறு இருந்தால் தவிர்த்துவிடவும்


உலர் திராட்சை இயல்பாகவே மலமிலக்கி. உலர் திராட்சை தண்ணீர் அருந்தினால் சிலருக்கு வயிற்றோட்டம்  ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு வயிறு தொடர்பான உபாதைகள் இருந்தால் ஊறவைத்த உலர் திராட்சையை அடிக்கடி எடுக்க வேண்டாம்.