மிக்ஸி,கிரைண்டர் மற்றும் வாஷிங் மெஷின் என நிறைய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு,பயன்பாட்டிற்கு வந்த பிறகு,வாழ்க்கை எளிதாகவும், சொகுசாகவும் மாறிவிட்டது.இதன் காரணமாக,உடம்பில் தேவையில்லாத கொழுப்பு மற்றும் எடை கூடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மற்றொருபுறம் மிதிவண்டிகள் பயன்பாடு குறைந்து போய்விட்டது.அதைப்போலவே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடைபயணமாக செல்லும் தேவையும் குறைந்து போய்விட்டது. இப்படியாக உடல் உழைப்பானது குறைய, குறைய எடை கூடும் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


மற்றொருபுறம் துரித உணவுகள் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் என உணவுகளும் நம்மை எடை கூட செய்வதற்கு ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. இவ்வாறு எடை கூடி இருக்கும் நேரங்களில்,நம்மையும் அறியாமல், நமக்கு,நம்முடைய எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.அத்தகைய நேரங்களில், இதற்காக நேரம் ஒதுக்கி நீச்சல் பயிற்சி, ஏதாவது ஒரு விளையாட்டு மற்றும் சைக்கிள் மிதிப்பது என செய்வது முடியாமல் போகலாம். அத்தகைய தருணங்களில்,சரியான யோகா ஆசிரியரை கொண்டு,சூரிய நமஸ்காரத்தை பழகிக்கொண்டு, வீட்டிலேயே நீங்கள் சூரிய நமஸ்காரத்தை செய்வதன் மூலமாக எடை இழப்போடு சேர்த்து மன எழுச்சியையும் அடையலாம்.


சூரிய நமஸ்காரம் என்பது பாரம்பரியத்தில் வழி வழியாக வரும் யோகாசனம் எனப்படும் உடற்பயிற்சியாகும். இது பண்டைய காலம் தொட்டு இருந்து வருகிறது.


ஆசனம்,தியானம் மற்றும் மூச்சு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்யப்படும் ஒரு பயிற்சியாகும். நமது உடல்,மனம்,மூளை மற்றும் மூச்சு ஆகிய நான்கையும் ஒருங்கிணைத்து செய்யப்படும் ஒரு பயிற்சி யோகாசனம் என்றால், அது மிகையில்லை.ஏறக்குறைய 12 ஆசனங்களை ஒருங்கிணைத்து செய்யப்படும் ஒரு பயிற்சியாகும்.


உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும்,சூரிய நமஸ்காரம் பயன்படுகிறது. சூரிய நமஸ்காரத்தின் நன்மைகளைப் பார்க்கும்போது, ​​ நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது என நிபுணர்களால் தெரிவிக்கப்படுகிறது. நாம் ஆழ்ந்த சுவாசத்தை உடற்பயிற்சியுடன் சேர்த்து செய்யும் போது, ​ சுவாச மண்டலத்தை சுத்தம் செய்கிறது. மேலும் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து சமன்படுத்துகிறது. மேலும் உறுதியான தசைகளுடன்,வலுவான முதுகெலும்பைப் பெற உதவுகிறது என சொல்லப்படுகிறது.


சரும பாதுகாப்பிற்கும்,முடி வளர்ச்சிக்கும்,இந்த சூரிய நமஸ்காரம் மிகவும் உதவி செய்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடம்பின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. சூரிய நமஸ்காரமானது உங்களை உற்சாகத்திற்கு கொண்டு செல்வதால், உங்கள் முகத்தில் வசீகரம் ஏற்படுகிறது. சூரிய நமஸ்காரத்தில் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ,அல்லது ஒவ்வொரு ஆசனத்திலும் இருக்கும் நேரத்தை நீடிப்பதாலோ,உங்கள் எடை இழப்பு இன்னும் அதிகப்படியாக நடக்கிறது. இதை ஆசிரியரின் அறிவுரைகளின்படியே  செய்ய வேண்டும்.


இதே போல பெண்களுக்கு ஏற்படும் முக்கியமானது பிரச்சனை, மாதவிடாய்  கோளாறுகள்.சில பெண்களுக்கு சுழற்சி மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.சில பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிகப்படியான வயிற்று வலி இருக்கும். சில பெண்களுக்கு எலும்பு மூட்டுகள் உடல் முழுவதும் அதிகப்படியான வலி இருக்கும். இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு சூரிய நமஸ்காரம் ஆகச்சிறந்த தீர்வாக இருக்கும்.


ரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஒரே சீராக இருப்பதின் காரணமாக, மூளை சுறுசுறுப்பாக இயங்கி  நினைவாற்றல் குறைபாடுகளை சரி செய்கிறது.


உடலின் எடை குறைப்பு, சுறுசுறுப்பு, முகத்தில் பொலிவு பளபளப்பு,முடி வளர்ச்சி,தேக ஆரோக்கியம், தேவையில்லாத கொழுப்பு குறைவது மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது என, யோகாசனத்தில் இருக்கும் இந்த சூரிய நமஸ்கார பயிற்சி செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கிறது.


ஆகவே, தினமும் முடியாவிட்டாலும் கூட. வாரத்தில் மூன்று நாட்களாவது, இந்த பயிற்சியை செய்து மேற்கண்ட பலன்களை பெறுவோம்.