பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் விரைவில் பாதிக்கப்படுகின்றனர். அதிக மழைப்பொழிவால், கொள்கலன்கள், குடியிருப்புகள் மற்றும் வடிகால்களில் தண்ணீர் தேங்கி, அவை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி விடுகிறது.
ஏடிஸ் கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது . மேலும் இது தலைவலி, தசைவலி, மூட்டு வலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொசுக்கள் கடிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதுடன் கொசு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்:
அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடாது
டெங்குவின் அறிகுறிகளை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, கண்களுக்குப் பின்னால் வலி, சோர்வு மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுப்படுத்த வேண்டும்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காதவாறு பாதுகாக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போதோ அல்லது வெளியில் விளையாடும் போதோ குழந்தைகள் முழுக் கை ஆடைகளை அணிந்திருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனால் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க முடியும்.
கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்
கொசுக் கடியிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பல நோய் விரட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன. குழந்தைகளின் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும் என்பதால், அவர்களுக்காக தயாரிக்கப்படும் சில பிரத்யேக கொசு மருந்துகள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
நோயொதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிவி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மேலும் படிக்க,
CM Stalin Speech: அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு