இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி:
சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2022 பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5.89 கோடி மதிப்பில் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிடோர் பங்கேற்ற்னர்.
அதிமுகவை சாடிய அமைச்சர்:
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் ஒரு பத்தாண்டு காலம் இந்த நடைமுறை இல்லாமல் போனது. மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தை தொடங்குவதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதனடிப்படையில் 5 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. அதில் 12 குளியலறைகள், 16 கழிப்பறைகள் இரண்டு மின் தூக்கி வசதிகளோடு தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கருத்தரிப்பு மையங்கள்:
ஃபெர்டிலிட்டி சென்டர் எனப்படும் கருத்தரிப்பு மையங்களை தமிழ்நாட்டில் ஏராளமாக தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையம் அமைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் எழும்பூரிலும், மதுரையிலும் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட அந்த இரண்டு மருத்துவ கருத்தரிப்பு மையங்களும் கட்டுமான பணிகள் நிறைவுற்று அதற்கான பரிசோதனை ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே முதன்முறை..!
சென்னையில் உள்ள மையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மதுரையிலும் வெகு விரைவில் பரிசோதனை தொடங்கி மிக விரைவில் அந்த கருத்தரிப்பு மையமும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும். நாட்டிலேயே அரசின் சார்பில் கருத்தரிப்பு மையங்கள் கட்ட எடுக்கப்படுகிற நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும். இந்த பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி:
குழந்தை இல்லாத திருமணமான தம்பதியினர் பலர் தனியார் கருத்தரிப்பு மையங்களில் லட்சங்களை கொட்டி குழந்தைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நடுத்தர மக்களுக்கு இந்த வாய்ப்பு என்பது மிகவும் ஆடம்பரமானதாக உள்ளது. இந்த நிலையில், அரசு சார்பில் அமைக்கப்படும் கருத்தரிப்பு மையங்கள் மூலம், பலரது குழந்தை கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.