பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான லஞ்ச்பாக்ஸ் தயார் செய்வது எப்படி? இது தேசங்கள் கடந்து உலகம் முழுவதும் உள்ள பெற்றோருக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவால். 


பல நாட்கள் நாம் லஞ்ச்பாக்ஸில் அடைத்துக் கொடுத்துவிடும் உணவு அப்படியே திருப்பிக் கொண்டுவரப்படும். நாளடைவில் இது பெற்றோருக்கு விரக்தியையும், குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பையும் கொடுத்துவிடும்.


உண்மையில் குழந்தைகளை சாப்பிட வைப்பதும் ஒரு கலை தான். குழந்தைகள் நம்மைப் போல் பசித்ததும் கிடைப்பது சாப்பிட மாட்டார்கள். அவர்கள் பசி ருசி அறியும். ருசி இருந்தால் மட்டுமே பசி தீர்க்க முற்படுவார்கள். அதனால் குழந்தைகளுக்கு சலிப்பூட்டாத வகையில் லஞ்ச்பாக்ஸ் கட்டித்தர வேண்டும். அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.


1. பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட உணவை கொடுக்காதீர்கள்:
உங்கள் பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட உணவுகளை கொடுத்து அனுப்பாதீர்கள். குழந்தைகளுக்கு பருவநிலைக்கு ஏற்ப உணவு கொடுங்கள். அதுபோல் வெயில் காலம் என்றால் தண்ணீருடன், மோர், மாம்பழக் கூழ், மில்க்‌ஷேக், பழச்சாறு என எதையாவது கொடுத்டு அனுப்புங்கள்.


2. வெரைட்டி மிஸ் பண்ணாதீங்க
உணவில் வெரைட்டி மிஸ் பண்ணாதீங்க. தினமும் இட்லி சாம்பார், சப்பாத்தி காய்கறிகள் என்று கொடுத்து அனுப்பாதீர்கள். சப்பாத்தி என்றாலும் கூட அதில் ஒரு நாள் காய்கறிகளை ஸ்ட்ஃப் செய்து தரலாம். ஒருநாள் அதை ப்ளைனாக கொடுத்து அனுப்பலாம். மாவு பிசையும் போதே அதில் புதினா சேர்த்து மனமாக செய்து தரலாம். கட்டி ரோல்ஸ், பன்னீர் ரேப்ஸ் என்று வித்தியாசமாக செய்து தரலாம். இட்லியைக் கூட பொடி இட்லி, ஃப்ரைட் இட்லி, காய்கறி ஸ்ட்ஃபடு இட்லி என்று கொடுத்தனுப்பலாம்.


3. நிறைய காய்கறிகளை பயன்படுத்தலாம்
நூடுல்ஸ், பாஸ்தா தான் உங்கள் குழந்தைகளின் விருப்பமான உணவு என்றால் அதை காய்கறிகளை எப்படி இன்ஃப்யூஸ் செய்யலாம் என்று பாருங்கள். முளைகட்டிய பயிர்கள், வேர்க்கடலை, பட்டானி, சோளம் என ஏதேனும் ஒன்றை பாஸ்தாவில் சேர்த்து பறிமாறுங்கள். இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது.


4. மிகவும் சிறிய அளவே கொடுத்து அனுப்புங்கள்
பள்ளிக் குழந்தைகளுக்கு அடிக்கடி பசி ஏற்படும். பள்ளிகளில் வேறு காலை ஒருமுறை மதியம் ஒரு முறை என இரண்டு முறை இடைவேளை வேறு வழங்குகின்றனர். அதனால் மதிய உணவை அதிகமாக அடைத்துக் கொடுக்காமல் அளவாகக் கொடுத்துவிட்டு பின்னர் பிரேக் டைமில் சாப்பிட முளைகட்டிய பயிர்கள், வறுத்த முந்திரி, உலர் பழங்கள் என கொடுத்து அனுப்பலாம்.


5. ஆரோக்கியமான மாற்று உணவுகளை யோசிங்க..
குழந்தைகளுக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். ஆனால் எப்போது வெள்ளை சர்க்கரையையே பயன்படுத்துவதற்குப் பதிலாக சில நேரங்களில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேன், பேரீச்சம்பழம் என பயன்படுத்தலாம். கேக், குக்கீஸ் செய்ய மைதாவுக்குப் பதிலாக கேழ்வரகு மாவு அல்லது ஓட்மீல் பயன்படுத்தலாம்.