வெரிகோஸ் என்பது கால் நரம்புகளில் ஏற்படும் ஒரு நோய் வகையாகும் . இது தமிழில் நரம்புச் சுருள் நோய், நரம்பு முடிச்சு நோய் என்று அழைக்கப்படுகிறது. கால்களில் உள்ள ரத்தக்குழாய்கள் வீங்கி புடைத்து சுருள் சுருளாக காணப்படும். இது கால்களில் உள்ள ரத்த நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படும் என கூறப்படுகிறது.
சிலருக்கு அதிகளவாக கால் தொடை பகுதிக்கு கீழே முட்டிக்காலுக்கு பின்புறத்தில், சதைகளுக்கு மத்தியில் நரம்புகள் பின்னிப் பிணைந்தது போன்று அல்லது முடிச்சிட்டு கொண்டதைப் போன்று, சுருளானதை போல இருப்பதை பார்த்திருக்கலாம். அதேபோல் இந்த வெரிகோஸ் பாதிப்பானது கால்களில் மட்டும் அல்ல அது உடம்பில் ஏனைய பாகங்களிலும் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. வெரிகோஸ் பாதிப்பு வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் வயது, உடல் பருமன், நின்று கொண்டே வேலை செய்வது என பல காரணங்களால் வெரிகோஸ் நோய் ஏற்படுகிறது.
எரியும் உணர்வு, நரம்புகளைச் சுற்றியுள்ள தோலின் நிறம் மாறுதல், அரிப்பு, உட்கார்ந்திருக்கும் போது வலி அதிகரிப்பது போன்றன வெரிகோஸ் ஏற்படுவதற்கான முக்கிய அடையாளங்கள் என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வயதானவர்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு இந்த வெரிகோஸ் நரம்பு சுருள் நோய் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்த வெரிகோஸ் வெயின் ( நரம்பு சுருள் )காரணமாக கால் பகுதிக்கான ரத்த ஓட்டம் கடுமையாக பாதிப்படையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவ்வப்போது காலில் அதிக அளவு வேதனையும் வலியும் குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும் என சொல்லப்படுகிறது. நாள்பட்ட நோயின் தாக்கத்தால் கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த வலி அசௌகரியம் காரணமாக சிலரின் நாளாந்த வேலைகள் கூட பாதிப்படைகிறது
இந்த வெரிகோஸ் வெயின், அதாவது நரம்பு சுருள் நோயை சரி செய்ய மருத்துவ சிகிச்சைகளைத் தவிர, வீட்டிலேயே எளிமையான முறையில் சில விஷயங்களையும் சேர்த்து மேற்கொள்ளவேண்டும் என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதை வேளை ஒரு நபர் அதிக எடை கொண்டவராக இருக்கும்போது இரத்தத்தை இதயத்திற்குத் கொண்டு சேர்ப்பதில் நரம்புகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன.
வெரிகோஸ் நரம்புச் சுருள் நோய் பாதிக்கப்பட்டுள்ள கால் உள்ளிட்ட தசை பகுதிகளை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அடுத்து இந்த நரம்பு நோய் வராமல் தவிர்க்க அதற்கு உண்டான யோகாசனங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். படவுத்தனாசனம், நௌகாசனம், மெருதண்டாசனம், சிர்சாசனம் மற்றும் சர்வாங்காசனம் போன்ற தலைகீழாக நின்று செய்யும் யோகா ஆசனங்களை செய்யலாம்.
வேலை செய்யும் இடங்களில் அல்லது பயணத்தின் போது வீடுகளிலோ நீண்ட நேரம் நிற்கவோ உட்காரவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நேரம் நிற்பது, உட்காருவதையும் தவிர்க்க அதற்கு பதிலாக, சிறிய அளவிலான ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அல்லது கால்விரல்களால் நடக்க முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது. உடற்பயிற்சிகள் அதிகம் உதவவில்லை என்றால், ஆயுர்வேத மருந்துகள், சில வழக்கமான உணவுகளை உண்ணலாம். நிலை மோசமடைந்து இரத்தப்போக்கு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டாம். அவ்வாறு நடந்தால், அறுவை சிகிச்சை மட்டுமே சாத்தியமான வழி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி கருந்துளசி இலை, கற்றாழையின் பசை மற்றும் வசம்பு 4 துண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வசம்பை நன்றாக இடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி கருந்துளசி இலையை சேர்த்துக் கொள்ளவும்.
கற்றாழை பசை தண்ணீரை வெளிவிடும் என்பதால், தண்ணீர் சேர்க்காமல் இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இந்த பசையை நரம்புகள் சுருண்டிருக்கும் இடங்களில் தொடர்ந்து ஒரு மாதம் வரை பூசி வந்தால், வீக்கம் குறைய ஆரம்பிக்கும். அதன்பிறகு வலியும், படிப்படியாக குறைந்துவிடும்.