வைட்டமின் இ கேப்ஸூல்கள் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட வைட்டமின் இ கேப்ஸூல் விளம்பரங்கள் வரிசை கட்டுகின்றன. அப்படி வைட்டமின் இ யில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமா? முகம் முதல் நகம் வரை நன்மை சேர்க்கக் கூடியது எனக் கூறுகின்றனர் நிபுணர்கள்.


நகம் வளர்ச்சி:


நாள் முழுவதும் கைகளை நாம் பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கிறோம். சமைக்க, பாத்திரம் துலக்க, துணி துவைக்க, தோட்ட வேலை செய்ய அது மட்டுமல்லாது அலுவல் வேலை, வாகன இயக்கம் என நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பணிகள். இதில் நகங்கள் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்பில்லை. நகங்களுக்கு வலு சேர்க்க உதவும் வைட்டமின் இ கேப்ஸூல். வைட்டமின் இ கேப்ஸுலை எடுத்து அதனை நகங்களின் ஓரத்தில் மசாஜ் செய்துவிடுங்கள். இதனால் நகத்திற்கு தேவையான ஈரப்பதமும் சத்தும் கிடைக்கும். பொதுவாக இதனை தூங்குவதற்கு முன்னர் செய்யுங்கள்.
 
நைட் க்ரீம்


வைட்டமின் இ கேப்ஸூல் நல்ல நைட் க்ரீமாகவும் செயல்படும். தூங்கும் முன்னர் ஒருசில சொட்டு வைட்டமின் இ கேப்ஸூல் துளிகளை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். முகத்தை சுத்தமாக கழுவி வைத்திருத்தல் அவசியம். அதன் பின்னர் இதனை தடவிக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த எண்ணெய் தலையணையில் படிந்துவிடலாம் என அஞ்சினால் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே பூசிக் கொள்ளுங்கள். இதனால் முகத்துக்குள் வைட்டமின் இ ட்ராப்ஸ் முற்றிலுமாக சென்றுவிடும்.


கேசம் அடர்த்தியாக


உங்கள் கேசம் அடர்த்தியாக வேண்டுமென்றால் நீங்கள் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யுடன் வைட்டமின் இ எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளிக்கும் முன்னர் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்னர் இதனை தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிதமான ஷாம்பூ கொண்ட தலையை அலசுங்கள். வாரத்தில் இரண்டும் முறை இதனைப் பயன்படுத்தலாம். இரண்டு மூன்று முறை பயன்படுத்திய பின்னரே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். 


ஆன்ட்டி ஏஜிங் ஜெல்


வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் வருவது இயல்புதான். அந்த மாதிரியான சுருக்கங்கள், வடுக்கள், கரும்புள்ளிகள் தோன்றாமல் இருக்க நீங்கள் முகத்தில் வைட்டமின் இ எண்ணெய் போட்டு மசாஜ் செய்யலாம். இது முகத்திற்கு சிறப்பான பொலிவு தரும்.


சன்பர்னில் இருந்து காக்கும்


வெயில் காலத்தில் சன்பர்ன் ஏற்படுவது இயல்பே. வெயில் காலத்தில் நீங்கள் வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்தினால் அது சூரிய வெப்ப பாதிப்பில் இருந்து சருமத்தை காக்கும். வறண்ட சருமத்திற்கும், செதில் செதிலாக உதிரும் சருமத்திற்கும் நல்ல தீர்வு தரும்.  


வைட்டமின் இ பெற இதுபோன்று கேப்ஸூல்களைத் தான் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. அனைத்து தாவர எண்ணெய்களிலும் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இதில் கோதுமை கிருமி எண்ணெயில் உள்ளடக்கம் உள்ளது. வைட்டமின் இ நிறைந்த மற்ற தாவர எண்ணெய்களில் சூரியகாந்தி, பருத்தி விதை, ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் அடங்கும். இந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தலாம். ஆலிவ், ப்ரோக்கோலி, நிலக்கடலை, குடை மிளகாய், பாதாம், கடுகு கீரை, பசலை கீரை என பலவகையான உணவுப் பொருட்களிலும் கூட வைட்டமின் இ நிறைவாக இருக்கிறது.