கோடை வெயிலில் எதைக் குடித்தால் தாகம் தீரும் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். வெயிலுக்கு இதமாக, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றில் வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய சில பானங்களைப் பற்றி இங்கே காண்போம்.


சட்டு பானம்:


இது என்ன இதற்கு முன்னர் கேட்டதே இல்லையே என்று யோசிக்கிறீர்கள். இது தமிழ்நாட்டுக்கு புதுசு தான். வடக்கே இதை பரவலாக அருந்துகின்றனர். இது அங்கே ஏழைகளின் புரதம் என்று அழைக்கப்படுகிறது. அரை கப் சன்னாவை எடுத்து மிதமான தீயில் அடுப்பை வைத்து பாத்திரத்தில் இட்டு வறுத்துக் கொள்ளவும். 5 முதல் 7 நிமிடங்கள் வறுத்தால் நல்ல வாசனை வரும்.


அந்த வேளையில் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் அது சூடு தணிய விட்டுவிடவும். பின்னர் பவுடராக திரித்து கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து டம்ளரில் போட்டு அத்துடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, சிறிது உப்பும் சேர்க்கவும். கூடவே கொஞ்சம் எலுமிச்சை சாறும் தண்ணீரும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அவ்வளவு தான் சட்டு பானம் சட்டுனு தயார் ஆயிடும்.


சட்டுவின் பலன்கள் என்ன?


* இது ஒரு ஹெல்த் டானிக். உடல்நலத்தை மேம்படுத்தும்.
* இது கோடையில் கண்களுக்கு குளிர்ச்சி தரும். வெப்பத்தால் கண் எரிச்சல், அரிப்பு, வறட்சி ஏற்படும். அதனை சட்டு பானம் தீர்த்து வைக்கும்.
* தொண்டைக்கு இதமானது. தொண்டை சார்ந்த நோய்களை குணப்படுத்தும்
* சோர்வைப் போக்கி உடனடி பலத்தைத் தரும்
* கோடைகால வாந்தி உபாதையை நீக்கும்.
* உடற்பயிற்சியால் ஏற்படும் அயர்ச்சி, உடல் உழைப்பே இல்லாததால் ஏற்படும் சோர்வு.. என இரண்டையும் இது குணமாக்கும்.
* அதீத பசியைப் போக்கும்.
* புண்கள் இருந்தால் அவை வேகமாக குணமாக உதவும்
* இந்த பானம் நார்ச் சத்து நிறைந்தது.


மோர்:


வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் சூரியன் நம் எனெர்ஜியை , ஸ்ட்ரா போட்டு உறிந்துவிடுகிறது. வெயிலின் வறட்சியை போக்க சிலர் வீடு முழுக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை ஃபிரிட்ஜில் அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் அதெல்லாம் தீங்கு விளைவிக்க கூடியது. உடல் எடையை அதிகரிக்க கூடியது. பல இரசாயனங்களை சேர்த்திருப்பார்கள் இல்லையா!   அதனால் இதையெல்லாம் தவிர்த்துவிட்டு எளிமையாக கிடைக்கக்கூடிய மோரினை குடித்து பாருங்கள் ! வறட்சி நீங்குவதோடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட நன்மைகளும் அடங்கியிருக்கிறது.


விளாம்பழ ஜூஸ்:


சக்கரை நோயை கட்டுபடுத்தும் விளாம்பழம், வறட்டு இரும்பல் தடுக்கும், வாந்தி, குமட்டல்,நெஞ்சு எரிச்சலை குறைக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் தலை சுற்றலுக்கு மிகவும் பயனுள்ள மருந்தாகவே விளாம்பழம் பயன்படுகிறது. பித்தத்தைத் தணிக்கும் தன்மையையும் கொண்டது விளாம்பழம். காலையில் வெறும் வயிற்றில் விளாம்பழ ஜூஸை குடிக்கலாம், வேறு எந்த சமயத்திலும் இந்த ஜூஸை குடிக்கலாம். ஆனால் சாப்பிட்ட உடனேயோ அல்லது டீ மற்றும் காபிக்குப் பிறகும் விளாம்பழ ஜூஸை குடிக்கக்கூடாது.


கனிந்த விளாம்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதன் சதையை எடுத்து மிக்ஸரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்லம் சேர்க்கவும். 1 பெரிய எலுமிச்சையை பிழிந்து கொள்ளவும். பின்னர் அதில் 7 முதல் 8 புதின இலைகளையும் சேர்த்துக் கொள்ளவும். 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை உப்பு. நன்றாக கலந்து குடிக்க வேண்டியது. தேவைப்பட்டால் ஐஸ் சேர்த்துக் கொள்ளலாம்.


தேங்காய் தண்ணீர்:


தேங்காய் தண்ணீர் ஒரு இனிமையான மற்றும் சத்தான மாற்றாக உள்ளது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பல நன்மைகளை வழங்குகிறது.பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்ததாக தேங்காய் தண்ணீர் உள்ளது. இந்த தாதுக்கள் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகின்றன, இது நீரேற்றத்திற்கு அவசியம்.


வெள்ளரி புதினா ஜூஸ்:


1. வெள்ளரி புதினா மொஜிட்டோ


தேவையான பொருட்கள்:


வெள்ளரி பாதி துருவியது
ஃப்ரெஷ்ஷான புதினா இலை 1/4 கப்
2 டேபிள் ஸ்பூன் லைம் ஜூஸ்
2 டேபிள் ஸ்பூன் சுகர் சிரப்
சோடா
ஐஸ் க்யூப்ஸ்


செய்முறை:
 
1. ஒரு காக்டெய்ல் ஷேக்கர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளரி துண்டுகளையும் புதினா இலைகளையும் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.


2. அதில் லைம் ஜூஸ், சுகர் சிரப், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நன்றாக குலுக்கவும். 


3. இப்போது ஐஸ் க்யூப் நிரப்பிய கண்ணாடி டம்ப்ளரில் இதை ஊற்றவும்.  


4. அதன் மீது சோடா ஊற்றவும். பின்னர் புதினா இலைகளைப் போடவும். கொஞ்சம் வெள்ளரி துண்டுகளைப் போடவும்.