திடீர் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து ட்விட்டரில் மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார், நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். தனது வீட்டிலுள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் சரிந்து விழுந்து மயங்கினார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி இறந்தார்.


உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவரது திடீர் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. உடற்பயிற்சியே செய்யாவிட்டால் தானே இத்தகைய மாரடைப்பு வரும் என்பார்கள். ஆனால், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோதே ஒருவருக்கு மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த மருத்துவரின் ட்வீட் வைரலாகி வருகிறது.


அவர் கூறியிருப்பதாவது:


தீவிர மாரடைப்பு அல்லது மாரடைப்பால் ஏற்படும் மரணம் என்பது இதய செயல்பாடு நின்றுவிடுவதையே குறிக்கிறது. இதை மருத்துவ வார்த்தைகளில் ventricular tachycardia/ventricular fibrillation எனக் கூறுகிறோம். இது நேரும் நபருக்கு பல காலமாக வெளியில் தெரியாத, கண்டறியப்படாத இதய நோய் பாதிப்பு இருந்திருக்க வேண்டும். 
பொதுவாக ஆண்களே இவ்வகை பாதிப்புக்கு ஆளாவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இது அரிதானது என்று கூற முடியாது. அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளில் மொத்த இறப்பு விகிதத்தில் 15% SCD யாலேயே நேர்கிறது. நாள்பட்ட இதய பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இவ்வகை SCD ஏற்படுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க SCDயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகிறது. பெண்களைப் பொருத்தவரை, மெனோபாஸுக்குப் பின்னர் அவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகிறது.


இதய நோய்கள் இருந்தால் SCD வர வாய்ப்பு 6லிருந்து 10 சதவீதம் அதிகம். இப்படியான பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழாமல் தடுக்க சீரிய இடைவெளியில் இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக தகவமைத்துக் கொள்ள வேண்டும். புகைப் பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியே இல்லாத நிலை ஆகியன நாள்பட்ட இதய நோய்க்கு வழிவகுக்கும். இத்துடன் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், வயிற்றுப் பகுதியில் மட்டும் அதிக பருமன் ஏற்படுதல், மதுப்பழக்கம் ஆகியனவும் நாள்பட்ட இதய நோயை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டிருந்தால் அது திடீர் மாரடைப்பு மரணத்தைத் தருகிறது. உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் பக்க விளைவுகளை உடற்பயிற்சி செய்யாவிட்டால் ஏற்படும் பாதிப்பைவிட மிகைமிஞ்சிய முக்கியத்துவம் கொடுத்து அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.




மிகக்கடுமையான உடற்பயிற்சிக்குப் பின்னர் அரைமணி நேரத்துக்குள் தீவிர மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நாள்பட்ட இதய நோய் பாதிப்புள்ளவர்களுக்குத் தான் அப்படி ஏற்படும்.  அதுவும் எப்போதாவது கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது இது நிகழ வாய்ப்புள்ளது. 


Hypertrophic cardiomyopathy, myocarditis & Arrhythmogenic right ventricular cardiomyopathy போன்ற இதய பாதிப்புகள் உள்ளவர்களுக்குத் தான் மிகதீவிர உடற்பயிற்சிக்குப் பின்னர் SCA திடீர் தீவிர மாரடைப்பு அல்லது மாரடைப்பு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 


SCAவை தடுக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று புகைத்தலை நிறுத்திவிட்டு வாழ்க்கை முறையை நெறிப்படுத்துதல். மற்றொன்று அடிக்கடி இதய ஆரோக்கியத்தை சோதித்து தேவைப்பட்டால் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுதல். ஒரு நபர் ஒருநாளைக்கு ஒரே ஒரு சிகரெட் தான் குடிப்பார் என்றாலும் கூட அவருக்கு இதய நோய் ஏற்பட 50% வாய்ப்புள்ளது. பக்கவாதம் ஏற்பட 25% உள்ளது.


இதய அறுவைசிகிச்சைகள் பிரதமரின் பொது ஆரோக்கியத் திட்டத்தில் PMJAY வருகிறது. அதனால் பரிசோதனை, சிகிச்சை தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை என மக்கள் தயார் படுத்திக் கொள்ளலாம். முதலில் இதய நோய்கள் வராமல் தடுக்க வேண்டும். இரண்டாவதாக இதய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மருத்துவர் கூறியுள்ளார்.