உயர் ரத்த அழுத்தம் கொண்டிருப்போர் தங்கள் உறக்கம் மீது பிரத்யேக கவனம் செலுத்த வேண்டும். உறக்கத்திற்கும், உயர் ரத்த அழுத்தத்திற்கும் இடையிலான உறவு குறித்து இதுவரை ஆய்வுகள் பெரிதாக வெளியாகாத நிலையில், உறக்கமின்மை, தடைப்பட்ட உறக்கம் முதலானவை உயர் ரத்த அழுத்தத்தை மேலும் மோசமாக மாற்றுவதாக சமீபத்தில் Journal of Clinical Sleep Medicine என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், உங்களுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில், மோசமான உறக்கம் அதனை மேலும் அதிகரிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை விரட்டும் இயற்கை நிவாரணியாக உறக்கம் இருக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. நல்ல உறக்கம் இல்லாதவர்களுக்கு அவர்களின் ஹார்மோன் அளவுகள் அதிகரிப்பதோடு, ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக உயர் ரத்த அழுத்தம் உருவாகிறது.
இவை மட்டுமின்றி, நாம் உறங்குவதற்காக படுக்கும் முறையின் மூலமாகவும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, பொது உடல் நலனை மேம்படுத்தலாம்.
இடது பக்கம் திரும்பி படுத்து உறங்குவது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்துடிப்புக்கு ஏற்றவாறு எளிதாக ரத்தத்தை எடுத்துச் செல்வதால், இடது பக்கம் திரும்பி படுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. வலது பக்கம் திரும்பி படுப்பதால், உடலில் ரத்த ஓட்டத்தின் வேகம் சற்று குறையலாம்.
இவை மட்டுமின்றி நாம் கணக்கில் கொள்ள வேண்டிய மற்ற சில விவகாரங்களும் உண்டு..
வசதியான மெத்தை பயன்படுத்துவது...
உறங்கும்போது முடிந்த அளவுக்கு ஓய்வெடுப்பதையும், உடல் தளர்ந்து இருப்பதையும் உறுதி செய்யுமாறு நல்ல வசதியான மெத்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல மெத்தைகளில் உறங்குவது நீண்ட நேர உறக்கத்தை உறுதி செய்கின்றன. மேலும், அன்றைய நாளின் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, கூடுதலாகவும், இடையூறுகள் இல்லாமலும் உறங்க இத்தகைய வசதியான மெத்தை பயன்படுகிறது.
உறங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை...
உயர் ரத்த அழுத்தத்தை சரியாக கண்காணிக்க வேண்டுமெனில் உறங்கும் முறையை சரிசெய்ய வேண்டும். உறக்கத்திற்கு முன்பு, எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உண்ண வேண்டும். இது நெஞ்சு எரிச்சலைத் தவிர்க்கிறது. மேலும், உறக்கத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு எலக்ட்ரானிக் பொருள்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். அவற்றில் உள்ள நீல ஒளி, சூரியனைப் போல இருப்பதால், இத்தகை ஒளி மூளையை விழித்திருக்க சிக்னல் செய்கின்றன. இதனாள் உறக்கத்திற்கு முன்பு, புத்தகம் வாசிப்பது, வெந்நீரில் குளிப்பது முதலான பழக்கங்கள் உடலைத் தூங்குவதற்குத் தயார் செய்யும்.