இரவு நேர சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இரவில் உடல் முழுவதும் ஓய்வெடுக்கும் வேளையில் தசைகள், தோல்கள் அவற்றின் வேலைகளை செய்யத் தொடங்குகின்றன.
சரும பராமரிப்பு:
இரவில் தோல் மூன்று முக்கிய செயல்பாடுகளை செய்கிறது எனவும் ,இது தோல் அடுக்குகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது எனவும் ,ரத்த ஓட்டங்களை சீராக்கி செல்களை புதுப்பித்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
பொதுவாக பெண்கள் பலருக்கும் அழகான சருமத்தை பெற வேண்டும் என்பதே கனவாக இருக்கும். வெயில் காலம் என்றால் வியர்வை, தூசி என நாளெல்லாம் சருமம் பாழாகிவிடும். அதேபோல் குளிர்காலம் என்றால் சருமம் வறண்டு .எண்ணெய் தன்மையற்று ஒரு சாம்பல் நிறத்தில் ஒரு பளபளப்பற்ற தன்மையில் இருக்கும். ஆகவே இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியமென கூறப்படுகிறது.
எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் சருமத்தை சரி செய்ய சிறந்த நைட் கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரவில் முகத்தை சுத்தம் செய்து நைட் கிரீம் பூசி தூங்கச் செல்வது முகத்தை பளபளப்பாகவும் சுருக்கம் இல்லாமல் வைத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.
சுத்தமான முகம்:
எப்போதுமே அழகாக இருக்க சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானது. தூங்கும் போது தோல் இறந்த செல்களை எல்லாம் வெளியேற்றி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. இதை மனதில் வைத்து, படுக்கைக்கு செல்லும் முன் முகத்தை கழுவி சுத்தம் செய்து நைட் க்ரீம்களை பூச வேண்டும்.
அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவுடன் அப்படியே இருக்கும்.
தூங்கி எழும்போது சருமம் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமானால் , இரவு நேரத்தில் சரும பராமரிப்பை அவசியம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது . மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீம்கள் என காலையிலிருந்து மாலை வரை சருமத்தைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு வழிகளைக் கையாளுகிறோம். அதேசமயத்தில், இரவு நேர சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் பராமரிப்பது ஏன்?
இரவு நேரத்தில் வெயிலோ, தூசோ வியர்வையோ இருக்காது என்பதால் இரவு நேரத்தில் சருமத்தை சுத்தம் செய்து பராமரிப்புகளை மேற்கொள்வது இளமையை என்றுமே தக்க வைத்துக் கொள்ளலாமென மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் சருமத்தை பராமரிப்பதால் நேர்மறையான மாற்றங்கள் மற்றும்
சரும ஆரோக்கியம் மேம்படும்.
இரவு நேர சரும பராமரிப்பின் முதல் படியாக முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை சுத்தமாக நீக்க வேண்டும். முகம் நன்கு சுத்தமாகும் வரை தண்ணீர் அல்லது மேக்கப் ரிமூவரைக் கொண்டு முகத்தை முழுவதுமாக துடைக்க வேண்டும். முகத்தை கழுவிய பின்பு, டோனர் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பின்னர் சரும மருத்துவரின் ஆலோசனையோடு முகத்திற்கான இரவு நேரத்திற்கான கிரீமை பயன்படுத்தலாம்.
25 வயதை நெருங்குபவர்கள், ஆண்டி-ஏஜிங் உள்ள இரவு நேர கிரீமை உபயோகிக்கலாம் என கூறப்படுகிறது. இது இரவு நேரத்தில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு செயற்கை ரசாயன கிரீம்களை பயன்படுத்த விரும்பாதோர் ,வீடுகளில் இயற்கை முறையிலான இரவு தோல் பராமரிப்பு முறைகளையும், அல்லது கிரீம்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாதாம் எண்ணெய் மசாஜ்:
வறண்ட சருமத்திற்கு, இரவில் தூங்கச்செல்லும் முன்பு, சில துளிகள் பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்து விடலாம். இது தோலின் இளமையை தக்க வைப்பதோடு, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். பாதாம் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ‘ஈ’ சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
எண்ணெய் பசை அதிகம் கொண்ட சருமத்திற்கு, இரவில் தடவிய பாதாம் எண்ணெய்யை நீக்குவதற்கு, காலையில் பயறு மாவு அல்லது கடலை மாவு கொண்டு கழுவினால் எண்ணெய் பசை முற்றிலுமாக நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.
இதை எதையுமே பயன்படுத்த விரும்பாதோர் இரவில் பன்னீர் அல்லது ரோஸ் டோனர் பயன்படுத்தி எளிமையான விதத்தில் முகத்தை பாதுகாக்கலாம்.
இரவு:
அதுமட்டுமல்லாமல் தலையில் பொடுகு தொல்லையோ அல்லது ஏதேனும் அரிப்பு தொல்லை இருந்தாலும் முகத்தில் பருக்கள் வரலாம். ஆகவே முகப்பராமரிப்பை ஒழுங்காக செய்வதற்கு வாரம் ஒரு முறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டுமென கூறப்படுகிறது.
அதேபோல் இரவில் தூங்குவது மிகவும் இருட்டான அறையில் வெளிச்சம் இல்லாமல் , பார்த்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர் . இரவில் தோலில் வெளிச்சம் பட்டால் அது பகல் என நினைத்து தோலை புதுப்பிக்கும் பணியை நிறுத்தி விடும் என கூறப்படுகிறது.
நைட் கிரீம்:
இரவில் படுக்கைக்குச் செல்ல 30 நிமிடங்களுக்கு முன்னர் முகத்தை நன்கு சுத்தப்படுத்தி நைட் க்ரீமை தடவ வேண்டும். அப்போதுதான் கிரீம் முழுவதுமாக தோலில் காய்ந்து பிடித்துக் கொள்ளும். இல்லையென்றால் தலையணை முழுவதும் ஒட்டிக் கொள்ளும், கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.
அதேபோல் வறண்ட சருமம் அல்லது எண்ணெய் தன்மை கொண்ட சருமமோ அதற்கு ஏற்றவாறு மருத்துவரை அணுகி நைட்கரீம்களை பயன்படுத்தவும். மிகவும் வறண்ட சருமத்திற்கு, பாலிஹைட்ராக்ஸி அமிலங்கள், லாக்டிக் அமிலம் அல்லது கிளைகோலிக் அமிலம் குறைந்த கிரீம்களை பயன்படுத்தலாம்.
இது சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் புதுப்பிக்கவும் உதவுகிறது.
மிகவும் மென்மையான சருமத்திற்கு, தெர்மல் ஸ்பிரிங் வாட்டரைப் பயன்படுத்துவது , அசெலிக் அமிலம் மற்றும் நியாசினமைடு கொண்ட சீரம்களுடன் மாய்ஸ்சரைசர் பாவிப்பது ,தோலை நீண்ட காலமாக பாதுகாப்புடன் வைத்திருக்கும் என கூறப்படுகிறது.
எண்ணெய் சருமத்திற்கு, ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவும் மாண்டலிக் அமிலம் , அசெலிக் அமிலங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.