சிவகங்கை மாவட்ட அரசு  மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தையின் உணவு குழாயில் சிக்கியிருந்த தங்க மோதிரத்தை அகற்றிய மருத்துவ குழுவிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 



 

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் பாண்டியன் என்ற பள்ளி மாணவன்  பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது பிளாஸ்டிக் விசிலை விழுங்கிவிட்டார். இதையடுத்து, பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின் எண்டோஸ்கோபி உதவியுடன் விசிலை மருத்துவர்கள் எடுத்தனர். இந்த சம்பவம் கடந்த சில வருடங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகங்கைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்று தங்க மோதிரத்தை விழுங்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் நீண்ட போராட்டத்திற்கு பின் மோதிரத்தை எடுத்து குழந்தையை காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 



 

சிவகங்கை சண்முகராஜா தெருவில்  ராம்பிரசாத், நிரஞ்சனா தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை மதி மாலா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக தாய் நிரஞ்சனாவின் கையில் இருந்த தங்க மோதிரத்தை விழுங்கிவிட்டது. குழந்தை தனது தாயிடம் மோதிரம் தொண்டையில் சிக்கியது குறித்து தெரிவித்துள்ளது இதனை அடுத்து  பெற்றோர் உடனடியாக சிவகங்கை அரசு  மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவர்கள் உடனடியாக எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அந்த மோதிரம் உணவுக்குழாயில் சிக்கியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து மயக்கவியல் மருத்துவர் உதவியுடன் நவீன எண்டோஸ்கோபி முறையில் உணவுக்குழாயில் சிக்கியிருந்த மோதிரத்தை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதற்கு குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சிபட நன்றியினை தெரிவித்தனர்.

 



 


 

 

இது குறித்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி..." குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் வலி ஏற்பட்டு பொருட்களை வாயில் எடுத்து வைக்க வேண்டும் என நினைக்கும். எனவே காயின்ஸ், விசில், பேனா மூடி உள்ளிட்ட சிறிய அளவிலான பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்க கூடாது. தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்த குழந்தைக்கு மயக்க மருத்து கொடுத்து  ரிஜிட் எண்டாஸ்கோபி மூலம் தங்க மோதிரத்தை மருத்துவ குழுவினர் வெளியே எடுத்தனர். குழந்தை என்பதால் குறிப்பிட்ட  கால அளவு எடுத்துக் கொண்டு மோதிரத்தை அகற்றினார்கள். காது மூக்கு தொண்டை துறைத்தலைவர் நாகசுப்ரமணியன், மயக்கவியல் துறைத் தலைவர் வைரவராஜன் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ குழுவிற்கு பாரட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.