தமிழ் சினிமாவின் ப்ரூஸ்லீ என அழைக்கப்பட்டவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். தென்னிந்திய சினிமாவின் சீனியர் நடிகரான அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக  கதாநாயகனாக நடித்த அர்ஜூன் தற்போது பல படங்களில் வில்லனாக , குணச்சித்திர நடிகராக திரைக்களம் கண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நிகழ்சி ஒன்றில் தொகுப்பாளராக  அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 



”சர்வைவர் “ என்ற சாகச நிகழ்சியில் ஆக்‌ஷன் கிங்கை தொகுப்பாளராக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்பட்ட நிலையில், அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டதால், கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக பின்வாங்கியதாக கூறப்படுகிறது. அதே போல நடிகர் சிவகார்த்திகேயனிடமும் இந்த நிகழ்ச்சிக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. தற்பொழுது நடிகர் அர்ஜூன் இந்த சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் , சிறப்பாக இருக்கும் என தயாரிப்பு குழு முடிவெடுத்து அவரை நாடியுள்ளனர்.


அர்ஜூனும் தொகுப்பாளராக மாற பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. சர்வைவர்ஸ் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தனித்தீவிற்கு அழைத்து செல்லப்படுவர். அங்கு போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும், டாஸ்க்குகள்  ஒருங்கிணைப்பு குழுவால் தேர்வு செய்யப்பட்டு அதனை தொகுப்பாளர் வழங்க செய்ய வேண்டும். 100 நாட்கள் நடைபெறும் போட்டியின் முடிவில், அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஒரு நபருக்கு சர்வைவர் என்ற பட்டமும், சில லட்சங்கள் பரிசு தொகையும் வழங்கப்படும்.



இந்த சர்வைவர் நிகழ்ச்சி  இந்தியாவின் சில முக்கிய மொழிகளில் மட்டும் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான  உரிமையை பிரபல ZEE நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம் மும்பையில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தீவு ஒன்றில் இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது.  இதற்காக தனித்தீவு ஒன்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளார்களாம். சர்வைவர்  படப்பிடிப்பிற்காக அர்ஜூன் முன்னரே தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளாராம். முதலில் நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷூட்டை எடுப்பார்கள் என கூறப்படுகிறது. சமீப காலமாக நடிகர்கள் தொகுப்பாளர்கள் அவதாரம் எடுப்பதும், தொகுப்பாளர்கள் நடிகர்கள் அவதாரம் எடுப்பதும் ஆரோக்கியமான சூழலாக பார்க்கப்படுகிறது. முன்னதாக உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் என்ற நிகழ்சியை தொகுத்து வழங்கினார். நடிகர் விஜய் சேதுபதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் என்ற உலகளாவிய நிகழ்ச்சியின் தமிழ் வெர்சனை ஹோஸ்ட் செய்திருக்கிறார். இது தவிர நடிகை குஷ்பு, சங்கீதா, ஷ்ருதி ஹாசன் என  பலரும் தொகுப்பாளராக களம் கண்டிருக்கின்றனர்.