பாலிவுட் இசையமைப்பாளர்களில் ஒருவரான பப்பி லஹரி இன்று காலை முச்சுதிணறல் காரணமாக உயிரிழந்தார். 69 வயதான லஹரிக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னை (Obstructive Sleep apnea) இருந்ததாகவும் அவர் அதற்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா(Obstructive Sleep apnea) என்பது ஒருவகையான தூக்கம் தொடர்பான சுவாசக் கோளாறு. ஒரு நபர் தூங்கும்போது அவரது சுவாசம் துண்டிக்கப்பட்டு அது மீண்டும் தொடங்கும் ஒரு நிலை. அது மொத்தம் மூன்று வகைப்படும். அதில் தூக்கத்தில் ஏற்படும் இந்தத் தூக்கத்தைத் தடுக்கும் மூச்சுத்திணறலும் ஒன்று - மற்ற இரண்டும் சென்ட்ரல் ஸ்லீப் அப்னியா மற்றும் காம்ப்ளக்ஸ் ஸ்லீப் ஆப்னியா- பொதுவாக இந்த மூச்சுத்திணறல் பிரச்னையில் தூக்கத்தில் இருக்கும் ஒரு நபரின் தொண்டை தசைகள் திடீரென செயல்படாமல் இருக்கும். இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். 






இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்படும் முதல் அறிகுறி அவர்கள் உரத்து குறட்டை விடுவார்கள். கூடுதலாக, பகல்நேர தூக்கம் மற்றும் பகலில் ஈடுபடும் எந்த வேலைகளிலும் கவனம் இல்லாமை ஆகியவை இதன் சில அறிகுறிகள். இது Rapid Eye Movement Sleep எனப்படும் ஆழ்நிலைத் தூக்கத்தை அடைய முடியாததால் ஏற்படும் பிரச்னையாகும். கூடுதலாக தூக்கத்தில் மூச்சுத்திணறல் அப்படி திணறல் ஏற்படுவதால் விழித்துக் கொள்வது ஆகியன இதில் முக்கிய அறிகுறிகள். மற்றபடி தூக்கமின்மையால் காலையில் ஏற்படும் தலைவலி, வாய் வறட்சி, உயர் இரத்த அழுத்தம் மற்றும்  மனநிலைச் சிக்கல் ஆகியவையும் இந்த அறிகுறிகளில் அடங்கும்.


மூச்சுத்திணறல் பிரச்னையால் இறந்த பப்பி லஹிரி ஜூஹூவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 29 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் உடல்நிலை தேறிய பிறகு பிப்ரவரி 14 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அடுத்த நாள் வீட்டில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது, இதையடுத்து அவர் மீண்டும் கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.