மிர்சாபூர் வெப் தொடரில்  ‘லலித்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரம்மா ஸ்வரூப் மிஸ்ரா. 36 வயதான இவர், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று பிணமாக மீட்கப்பட்டார். பிரம்மா வீட்டில் இருந்து துருநாற்றம் வந்த நிலையில், பக்கத்து வீட்டினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிப்பறையில் கிடந்த மிஸ்ராவின் உடலை மீட்டு, பிரதேச பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நெஞ்சு வலி மற்றும் வாயு தொல்லைக்காக அவர் டாக்டரை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வில்லை. 




அண்மையில், பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா (40) மாரடைப்பால் இறந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் புனித்குமாரும் (40) மாரடைப்பால் உயிரிழந்தார். அதே போல இயக்குநர் ராஜ் கெளசலும் தனது 50 வயதில்  மாரடைப்பால் உயிரிழந்தார். இப்படி பிரபலங்கள் பலர் தொடர்ந்து மாரடைப்பால் இறந்து வருவது திரை உலகில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில்  ஏன் இவ்வாறான இறப்புகள் நிகழ்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 




கடந்த 20 ஆண்டுகளில் 50 வயதிற்கு கீழானவர்களின் இறப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதில் 25 சதவீத மாரடைப்பு 40 வயதிற்கு கீழானவர்களுக்கே ஏற்பட்டிருக்கிறதாம். 


மாரடைப்பால் அதிகரிக்கும் இந்த இளம் வயது உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோசமான வாழ்க்கை முறையாலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்டவை குறித்து முறையான புரிதல் இல்லாத காரணத்தினாலும் ஏற்படுவதாக  மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து மருத்துவ வட்டாரம் குறிப்பிடுவது என்னவென்றால்,'' முறையான தூக்கம் இல்லாமை, வேலை அழுத்தம் உள்ளிட்டவை அதிக அளவில் பிரச்னைக்கு காரணமாகிறது. இதுமட்டுமன்றி அதிகளவு மது, புகைப்பிடித்தல், சத்து இல்லாத உணவுகள் உள்ளிட்டவையும் முக்கிய காரணிகளாக உள்ளது. அதே போல அங்கீகரிக்கப்படாத ஸ்டீராய்டு ஊசிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வதும் மாரடைப்பைக்கு காரணம் என்கின்றனர்.


அதே போல ஒருவருக்கு நீண்ட நாட்களாக மன அழுத்தம் இருக்குமாயின் அது இதய தமனிகளின் உள்ளே மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்தினால் ஏற்படும் வீக்கம் இரத்த உறைவை உருவாக்குகிறது. இதுவும் மாரடைப்புக்கு காரணமாகிறது