ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம் அருகே நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, கோமதி (28) என்ற பெண்ணுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கருவுற்ற கோமதிக்கு கடந்த 13 ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவர்கள் குறிப்பிட்ட நாளில் கர்பிணி கோமதிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாலை கோமதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லோகநாதன் அவரது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூப்பை பார்த்து அதில் குறிப்பிட்டுள்ளவிரு வீட்டிலேயே கோமதிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.




அச்சமயம் இருவர் பார்த்த பிரசவத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை இறந்து பிறந்த நிலையில் கர்ப்பிணி கோமதிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் திடீரென மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவி மற்றும் இறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட கர்பிணி கோமதிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் குழந்தைகயை பரிசோதித்த போது குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கோமதிக்கு இங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அடுக்கம்பாறை அழைத்து வந்து அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி கோமதி அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.




இந்நிலையில், புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன், குழந்தை இறப்பு தொடர்பாக நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் யூடியூப் மூலமாக வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுவது குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இது குறித்து லோகநாதன் விசாரணையில் கூறியதாக கூறப்படுவது. தனது மனைவிக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி ஏற்படவில்லை. அதற்க்கு பிறகு தான் வலி வந்தது வலி பொறுக்காமல் எனது மனைவி துடிதுடித்தால் அதனால் செய்வதறியாது. எனது அக்கா உதவியோடு குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்து நாங்களே பிரசவம் பார்த்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டது. மற்றபடி நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும், யூடியூப்பை பார்த்தும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தை இறந்தது தொடர்பாக லோகநாதன் காவல்துறையால் கைது செய்யபப்ட்டுள்ளார்.