விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் திடீரென மரடைப்பு ஏற்பட்டு மரணங்கள் நிகழ்வது, விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தாகிறதா விளையாட்டும், உடற்பயிற்சியும்?
உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும், இன்றைய காலகட்டங்களில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். அதோடு, பல்வேறு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு பழக்கங்களும் உடல் மற்றும் மன நலனை பேணி காக்க மிகவும் உதவுகிறது என நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில காலங்களாக நிகழும் சம்பவங்கள் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கும் விதமாக உள்ளது. அதற்கு உதாரணமாக பெரும் திரை நட்சத்திரங்கள் முதற்கொண்டு இளம் வீரர்கள் வரையிலான பல்வேறு நபர்களின் மரணங்களை கூறலாம்.
தருமபுரியில் தாசில்தார் மரணம்:
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இறகு பந்து போட்டியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகள் முகாம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த அதியமான் பங்கேற்று விளையாடிய போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூரில் பயிற்சியாளர் மரணம்:
முன்னதாக நேற்று கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற மாணிக்கம் என்ற பயிற்சியாளர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
19 வயது மாணவி மரணம்:
கடந்த 8ம் தேதி பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், கபடி விளையாடிய 16 வயது சிறுமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
கடலூரில் ஒருவர் பலி:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடலூரில் நடைபெற்ற கபடி போட்டியின் போது, விமல் எனும் வீரர் ஒருவரைப் பிடிக்க முயன்று அப்படியே கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கேரளாவில் ஒருவர் பலி:
2019-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ராதாகிருஷ்ணன் தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமார்:
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த 2021ம் ஆண்டு உடற்பயிற்சியின் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியானது அதிர்ச்சியளித்தது. கேகே எனப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மேடையில் பாடும்போதே பலியானது என, திடீர் மாரடைப்பல் ஏற்பட்ட மரணங்கள் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் என்ன?
பொதுவாக, விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் நாம் அதிகப்படியான ஆற்றலைச் செலவழிப்பதற்கு, ஏற்றாற்போல் இதயமும் செயல்பட வேண்டி உள்ளது. அந்த சூழலில் இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இதயத்துடிப்பு தொடர்ச்சியாக வேகமாக இருக்கையில், ஒருவேளை இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து கவனிக்காமல் விட்டிருந்தால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ வாய்ப்புண்டு.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி ஆபத்து?
விளையாடும்போது அதிகப்படியாக வியர்ப்பது, நீர்ச்சத்து குறைவாக இருப்பது, குளுகோஸ் முற்றிலுமாகக் குறைவது போன்ற சூழல்களின்போது மயக்கம் வரும். சில நேரங்களில், வெறும் வயிற்றில் சாப்பிடாமல், ஆற்றல் குறைவாக இருக்கும்போது இப்படி நிகழலாம். ஆகையால், உடலில் சர்கரைதன்மையை சீராக வைத்திருக்க உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற எந்தச் செயல்பாட்டிற்கு முன்பும், கார்போஹைட்ரேட் உள்ள செவ்வாழைப் பழம் போன்றவற்றை உண்பது நல்லது. அதன்மூலம், தொடக்கத்திலேயே ஊட்டச்சத்துகளை எரித்து ஆற்றலை உருவாக்காமல், உடலும் கார்போஹைட்ரேட்டில் இருந்து ஆற்றலை எடுத்துக்கொள்ளும்.
திடீரென விளையாடுவதும் ஆபத்து:
மாதக்கணக்கில் விளையாடாமல் இருக்கும் சிலர் திடீரென ஒரு நாள் அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது இத்தகைய பிரச்னைகள் எழும். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று ஒரே நாளில் அதிகப்படியான பயிற்சிகளை மேற்கொள்வதும் ஆபத்தாகிவிடும். அதற்காக தான், ”எப்போதும் விளையாட்டையோ, உடற்பயிற்சியையோ தொடங்கும்போது, வார்ம் அப் செய்வதும், இறுதியில் கூல் டவுன் பயிற்சிகளைச் செய்வதும் அவசியம்” என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.