கிளி வளர்ப்பு விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு அலெக்சாண்ட்ரியன் மற்றும் பேராகீட் வகை கிளிகளை வீட்டில் வளர்த்ததால் வனத்துறை அவருக்கு அபராதம் விதித்துள்ளது. நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் இருந்த கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர். 


கிளி வளர்த்த ரோபோ சங்கர்:


தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, பல்வேறு முன்னணி திரைநட்சத்திரங்களின் குரலில் பேசி பிரபலமானவர் ரோபோ சங்கர். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் அவர், பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். அண்மையில் வெளியான ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ மூலம், அவர் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்ப்பது தெரிய வந்தது.  


அபராதமும்.. வழக்குப்பதிவும்:


இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர். இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். அதோடு அவர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.