ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வெங்காயத்தின் பங்கு மிக முக்கியமானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


சர்க்கரை என்பது வியாதியா?


சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது. 


இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாம இருப்பது ஏற்படுகிறது. 


நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள். கூடவே, அதிக நார்ச்சத்து, குறைந்த மாவுச்சத்து, ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். 5 முதல் 12 ஆண்டு காலமாக உங்களுக்கு அன்றாடம் ஏதேனும் பழம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உங்களை சர்க்கரை நோய் தாக்குவதற்கான வாய்ப்பு 40% குறைவு.  கொய்யாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.


சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் வெங்காயம்:


வெங்காயத்தில் கலோரிக்கள் குறைவு. ஆனால் அதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். வெங்காயத்தில் இருக்கும் குவெர்செடின் என்ற ஃப்ளேவனாய்டு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் என்பது நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் கூறுகளும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் சி ஆகியன அதிகம். அதுதவிர அதில் நிறைய மைக்ரோ ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.


எவ்வளவு சாப்பிடலாம்:


என்னதான் அமிர்தமே என்றாலும் கூட அளவு முக்கியம் என்பது நம் முன்னோர்கள் கூற்று. அதனால் தி அமெரிக்கன் டயபெட்டீஸ் அசோஷியேஷன்  (The American Diabetes Association ஏடிஏ) எவ்வளவு வெங்காயம் சாப்பிடலாம் என்று வரையறுத்துள்ளது. மூன்று முதல் ஐந்து செர்விங் மாவுச் சத்தற்ற காய்கறிகளை ஒரு சர்க்கரை நோயாளி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு நபர் ஒரு சர்விங் அதாவது அரை கப் சமைத்த வெங்காயம் அல்லது ஒரு கப் சமைக்காத வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுவே அளவுக்கு அதிகமானால் மாவுச்சத்து உடலுக்கு சென்று சேருமாம். ஆகையால் அளவறிந்து வெங்காயத்தை உட்கொள்வது சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.