கோடைக் காலத்தின் போது சருமம் பிசுபிசுப்பாக இருக்கிறதா? இதற்காக தண்ணீர் குடிப்பதையும், டயட்டையும் காரணம் காட்டினாலும், உடலில் சரும உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் சீபம் என்னும் திரவம் சுரப்பதில் நிகழும் சமமின்மையின் காரணமாக முகம் பிசுபிசுப்பாக மாறுகிறது. 


உடலின் இயற்கையான எண்ணெய்களால் உருவாக்கப்படும் பிசுபிசுப்பான திரவம் `சீபம்’ என்று அழைக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் தொற்றுகளைத் தவிர்க்க உடலுக்கு உதவும் பாக்டீரிய எதிர்ப்பு திரவமே சீபம் ஆகும். 


மேலும், சருமத்தைப் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து காப்பாற்றுவது, சருமப் பாதிப்புகளை சரிசெய்வது முதலானவற்றையும் மேற்கொள்வதாக இருக்கிறது `சீபம்’. இது உடலில் சருமத்தின் நீர்ச்சத்து அதிகரிக்க உதவுவதோடு, கொழுப்புகளைக் கரைக்கும் ஆண்ட்டி ஆக்சிடண்ட்களை சருமத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லவும் பயன்படுகிறது. 


சீபம் உற்பத்தியிலும், தரத்திலும் அழகிற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பங்கு அதிகமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மேக்கப் பொருள்கள் சருமத்தில் இருந்தும், தலையில் இருந்தும் சீபம் திரவத்தை நீக்குகின்றன. இதனால் சருமம் உலர்ந்து போவதோடு, முடிகளின் வளர்ச்சியும் தடைப்படுகிறது. 


சீபம் அதிகமாக உருவானாலும், குறைவாக உருவானாலும், உடலுக்கு எதிர்மறை பாதிப்பை உருவாக்குகிறது. தீவிரமாக டயட் கட்டுப்பாட்டைப் பேணி, உண்பதைத் தவிர்ப்போருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உடையோருக்கும் சீபம் சுரப்பது குறைவாக இருக்கிறது. அதே வேளையில், அதிகளவில் உண்போருக்கு சீபம் அதிகமாக சுரப்பதால், எண்ணெய் வடிவதைப் போலவும், பிசுபிசுப்பாகவும் சருமத்தை மாற்றுகிறது. 



சீபம் குறைவாக உற்பத்தியாகும் போது எப்படி சரி செய்வது?


1. சூடான நீரில் குளிக்கும் போது, சருமத்தின் இயற்கையான எண்ணெய்கள் நீக்கப்படுவதால், சற்றே குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 


2. நல்ல தரமான மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். 


3. அதிகமாக குடிநீர் பருக வேண்டும். 


4. ஒமேகா 3 சத்துக்கள் அடங்கிய உணவை உண்ண வேண்டும். 



சீபம் அதிகமாக உற்பத்தியாகும் போது எப்படி சரி செய்வது?


1. ஐஸ்பேக் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். 


2. ஆயில் க்ளென்சர்களைப் பயன்படுத்தி, முகத்தில் இருக்கும் புழுதி, அதீத சீபம் முதலானவற்றை சுத்தம் செய்ய வேண்டும். 


3. சருமத்தில் இருக்கும் எண்ணெய், புழுதி, இறந்த சரும செல்கள் முதலானவற்றைக் க்ளே பேக் பயன்படுத்தி நீக்க வேண்டும். 


4. அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுகள், உடலில் சர்க்கரை அளவை மாற்றும் உணவுகள் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். 


சருமத்தின் மிக முக்கிய பகுதி சீபம். இது உடலின் மேற்பரப்பை முழுவதுமாக பாதுகாக்கிறது. எனவே இதனைச் சரியாக கண்காணித்து, குறைவாகவும் இல்லாமல், கூடுதலாகவும் இல்லாமல், உடலுக்கேற்ற சமத்துடன் இருப்பதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.