குளிர்காலம் வந்துவிட்டாலே உடலுக்கு இதமாக போர்வை தேடும் மனது. இல்லாவிட்டால் குடிக்க இதமாக ஒரு கோப்பை காபி, டீ, ஹாட் சாக்லேட், சூப் என்று ஏதாவது தேடும். இப்படியாக குளிர் காலத்தில் பசி ஆசை விதவிதமாக விரிவடைய நாம் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து உண்ணுதல் அவசியமாகிறது. அதனால் குளிர் காலத்தில் உடலுக்கு ஊட்டச்சத்து தரும் ஃப்ரெஷான ஆர்கானிக் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணுதல் அவசியம். காய்கறி, பழங்கள், உலர் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உலர் கொட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள் நெய் சேர்த்துக் கொள்வது அவசியம்.


சீஸ், முட்டை, மீன்:


சீஸ், முட்டை, மீனில் புரதம், வைட்டமின் பி12 உள்ளன. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. ஒரு நாளைக்கு ஒரு அவித்த முட்டையாவது சாப்பிடுதல் அவசியம். மீன் உணவை அரிசி சாதம், கட்லட்டுன் சேர்த்தல் அவசியம். இந்த உணவு வகைகள் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.


காய்கறிகள்:


உணவில் ஸ்வீட் பொட்டேடோஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். டர்னிப்ஸ், யாம் எனப்படும் சேனைக் கிழங்கு ஆகியனவற்றை குளிர் காலத்தில் உண்ணுதல் அவசியம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளன. இது மலச்சிக்கலை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். டர்னிப் எனும் நூக்கலில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகம். அதுமட்டுமல்லாது வைட்டமின் கே அதிகமாக இருக்கிறது. உணவில் ப்ரோகோலி, காளான், முள்ளங்கி, பீன்ஸ், கேரட் ஆகியனவற்றை சேர்த்துக் கொள்ளவும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.


பேரீச்சம் பழம்:


பேரீச்சம் பழத்தில் குறைந்த கொழுப்பு சத்து உள்ளது. இதில் வைட்டமின் நிறைவாக உள்ளது. தாதுக்களும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்துக்களும் உள்ளன. இது ஊட்டச்சத்தின் பவர்ஹவுஸ் என்றுகூட அழைக்கப்படுகிறது. பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன. குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன.


பாஜ்ரா
 
கம்பு இதை இந்தியில் பாஜ்ரா என்று அழைக்கின்றனர். இதில் இரும்புச்சத்து, கொழுப்பு, புரதமர், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் கம்பு உண்பது நல்லது. கம்பு மாவை கொண்டு ரொட்டி செய்யலாம். கம்பு மாவு கொண்டு கூழ் செய்யலாம். கிச்சடியும் செய்யலாம்.
 
வாசனைப் பொருட்கள்


கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்ததற்கு காரணமும் பிரிட்டன் இந்தியாவை அடிமைப்படுத்தியதற்கும் இங்குள்ள வாசனை பொருட்கள்தான் காரணம். குளிர் காலத்தில் மிளகு, வெந்தயம் போன்ற வாசனைப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சளி, இருமல், அஜீரணக் கோளாறு, ரத்த சுழற்சி நோய்களை சரி செய்யும். இஞ்சி, கிராம்பு, பட்டை, மஞ்சள், ஜீரகமும் உடலுக்கு உகந்தவை. 


உணவே மருந்து என்பதை உணர்ந்து ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற உணவை பழக்கிக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு குறை ஒன்றும் இருக்காது.