நாடு முழுவதும் 23 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விற்பனை விலையை நிர்ணயித்து, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


அதிரடி உத்தரவு:


மருந்து விலைக் கட்டுப்பாட்டாளரான தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA),  18 மருந்துகளின் உச்சவரம்பு விலையையும், 23 புதிய மருந்துகளின் சில்லறை விலையையும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நிர்ணயித்துள்ளது. இந்த மருந்துகள் பெரும்பாலும் முடக்கு வாதம், வலி ​​மேலாண்மை, காசநோய் (TB), வகை 2 நீரிழிவு நோய், சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன.


நோக்கம் என்ன?


இந்த அறிவிப்பின் அடிப்படையில், குறிப்பிட்ட அனைத்து மருந்துகளின் விலையையும் உற்பத்தியாளர்கள் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது நோயாளிகளுக்கு மருந்துகளை மலிவாக மாற்றும். உச்சவரம்பு விலையை கடைபிடிக்காத உற்பத்தியாளர்கள், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகையை  நிறுவனங்கள் அரசிடம் டெபாசிட் செய்ய வேண்டும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விலையை காட்டிலும் குறைவான அதிகபட்ச சில்லறை விற்பனையை கொண்டுள்ள மருந்து நிறுவனங்கள், எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளக்து. இந்த விலை கட்டுப்பாட்டு நடவடிக்கை மூலம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மாற்றியமைக்கப்பட்ட விலை விவரங்கள்:


புதிய அறிவிப்பின்படி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் Gliclazide ER மற்றும் Metformin ஆகியவற்றின் உச்சவரம்பு விலை 10.30 ஆகவும், Amoxycillin மற்றும் Potassium Clavulanate Oral Suspension IP விலை ரூ.4.05 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இதேபோல், வலி ​​மேலாண்மைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் Aceclofenac + Paracetamol + Serratiopeptidase மாத்திரையின் விலை ரூ.5.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Diclofenac Diethylamine, Methyl Salicylate மற்றும் Formoterol Fumarate போன்ற மருந்துகளின் உச்சவரம்பு விலையும் குறைக்கப்பட்டுள்ளது.


பொதுவாக மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் தியோபென்டோனின் போன்ற புதிய மருந்து கலவைகள்  1 கிராம் குப்பியின் உச்சவரம்பு விலை ரூ. 55.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இது தவிர, ரத்த உறைவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வார்ஃபரின் 5மி.கி.யின் விலை ரூ.2.40 ஆகவும், தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் க்ளோஃபாசிமைன் 100 மி.கி.யின் விலை ரூ.3.98 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .


இனி இது கட்டாயம்:


அதோடு, மருந்து தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்த மருந்து தரவுத்தள மேலாண்மை அமைப்பு (IPDMS) மூலம் மருந்துகளின் விலைப் பட்டியலை கட்டுப்பாட்டாளருக்கு வழங்குவதும், அதன் நகலை மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் மற்றும் விற்பனையாளர்களிடம் சமர்ப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சில்லறை விற்பனையாளரும் மற்றும் டீலரும் அவரவர் வணிக தளத்தில் மருந்துகளின் விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.