அதிகமாக சாப்பிடுபவர்களைப் பார்த்து 'உன் வாய்க்கு ஒரு பூட்டு போடணும்' என்று விளையாட்டாக சொல்வதுண்டு. இங்கே எடை  குறைப்பு சிகிச்சைக்காக.விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட அப்படி ஒரு டெக்னிக்கை தான் பயன்படுத்தியிருக்கின்றனர். விஞ்ஞானிகள் இதற்காக பிரத்யேகமாக ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். 


நியூசிலாந்து நாட்டின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் லண்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இணைந்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது பல்வரிசையில் காந்த சக்தி கொண்ட போல்ட்டுகளைப் பொருத்திவிடுவார்கள். இதனால்,  வாயை 2 மில்லி மீட்டர் தாண்டி திறக்க முடியாது. சுயகட்டுப்பாடில்லாமல் உணவு உண்டு உடல்பருமன் நோய்க்கு ஆளாபவர்களுக்கு இது ஒரு கடிவாலம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


இதற்கு டென்டல் ஸ்லிம் டயட் கன்ட்ரோல் ( DentalSlim Diet Control) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை நியூசிலாந்தை நாட்டைச் சேர்ந்த 7 பெண்களிடம் முதலில் சோதித்தனர். ஏழு பேருமே உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களாவர். அவர்களுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு லோ கேலரி உணவும் வழங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது கண்டறியப்பட்டது.




இதேபோல் பிரிட்டனிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கேயுல் சில வயதுடைய பெண்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்கள் இந்த டென்டல் ஸ்லிம் டயட் கன்ட்ரோல் ( DentalSlim Diet Control) கருவியைப் பொருத்திய பின்னர் 6.36 கிலோ எடை குறைந்துள்ளனர். இதனை பிரிட்டிஷ் டென்டல் ஜர்னல் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.


இந்தக் கருவி குறித்து ஒட்டாகோ பல்கலைகழகத்தின் பேராசிரியர் பால் ப்ரண்டன் கூறும்போது, இந்தக் கருவியை எப்போது வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். தேவையில்லாத போது நீக்கிக் கொள்ளலாம். இது சிறிய ரத்தமில்லா அறுவை சிகிச்சை மூலமே மேற்கொண்டுவிடலாம் என்றார். ஆனால், இந்தக் கருவி ஆன்லைனில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த சிகிச்சை கொடுமைப்படுத்துவதுபோல் உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.


ஒட்டாகோ பல்கலைக்கழகம் தரப்பில் இந்தக் கருவி நீண்ட கால எடை குறைப்பு சிகிச்சைக்கானது அல்ல. சில நேரங்களில் எடைக் குறைப்பு சிகிச்சையை மேற்கொள்ளும் முன் குறைந்தபட்ச எடையளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு வரவே இந்த குறுகிய கால சிகிச்சையை நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.


டென்டல் ஸ்லிம் டயட் கன்ட்ரோல் ( DentalSlim Diet Control)  கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின்னணியில் லண்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜொனாத்தான் போடன்ஸ்கி மற்றும் லீட்ஸின் ஆலோசகர் டாக்டர் ரிச்சர்ட் ஹால் ஆகியோர் இருக்கின்றனர்.  


ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்காக வேலை பார்த்தல், உடற்பயிற்சியே செய்யாமல் இருத்தல், உணவு முறையில் ஒழுங்கை பின்பற்றாதுதல் எனப் பல்வேறு காரணங்களாலேயே உடல்பருமன் நோய் ஏற்படுகிறது.