Nestle Cerelac: குழந்தைகளுக்கான பிரபல உணவு பொருளான செர்லாக், பல வளர்ந்த நாடுகளில் சர்க்கரையே இன்றி விற்பனை செய்யப்படுகிறது.


செர்லாக்கில் சர்க்கரை அளவு:


பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகின. அதன்படி,  இந்தியாவில் நெஸ்லே மூலம் அதிகம் விற்பனையாகும் இரண்டு குழந்தை உணவு பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, பல நாடுகளில் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேனைச் சேர்ப்பதாகவும், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் சர்வதேச வழிகாட்டுதல்களை மீறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே இந்த விதி மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. iஇது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா Vs வெளிநாடுகளில் செர்லாக்:


இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து 15 Cerelac குழந்தை தயாரிப்புகளிலும்,  ஒரு பரிமாறுதலுக்கு சராசரியாக 3 கிராம் சர்க்கரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதே தயாரிப்புகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் சுத்தமாக சர்க்கரையே சேர்க்கப்படாமல் விற்கப்படுகிறது.  அதே நேரத்தில் எத்தியோப்பியா மற்றும் தாய்லாந்தில், ஒவ்வொரு பரிமாறுதலுக்கும் கிட்டத்தட்ட 6 கிராம் சர்க்கரையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தயாரிப்புகளின் பேக்கேஜிங்கில்,  ஊட்டச்சத்து தகவல்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரையின் அளவு பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. இதனை குறிப்பிட்டு, நெஸ்லே தனது தயாரிப்புகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை சிறந்த படங்களைப் பயன்படுத்தி சிறப்பித்துக் காட்டினாலும், சர்க்கரை தொடர்பான விவகாரத்தில் அது வெளிப்படையானது இல்லை” என பப்ளிக் ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.


சர்க்கரையால் ஆபத்து:


அதிகப்படியான சர்க்கரை குழந்தைகள் மத்தியில் ஒருவித போதையை ஊக்குவிக்கும். அதிக சர்க்கரை பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான சர்க்கரை பயன்பாட்டால் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்தம் அழுத்தம் போன்ற பிற நாள்பட்ட தொற்றாத நோய்கள் ஏற்படலாம். மேலும், வயதுவந்தோரின் வாழ்க்கையில் ஊட்டச்சத்து அடிப்படையிலான கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.


நெஸ்லே விளக்கம்:


குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசிய நெஸ்லே இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், ”நாங்கள் அனைத்து உள்ளூர் விதிமுறைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே அதன் குழந்தை தானிய வரம்பில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30% வரை குறைத்துள்ளதாகவும்” விளக்கமளித்துள்ளார்.  நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான செர்லாக் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.