சிறுதானியங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கு ஏற்ற உணவு என பலருக்கும் தெரியும். அதே சமயம் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் இந்த சிறுதானியங்கள் உதவுகின்றன. ஆனால் சிறுதானியத்தில் சுவையாக என்ன சமைப்பது? நெல் அரிசியின் சுவை இதில் வருமா? என எக்கச்சக்க குழப்பத்தில் இருக்கிறீர்களா... 


அதற்கான சில ரெசிப்பி ஐடியாக்களைத் தருகிறார் நிபுணர். 


சிறுதானிய பேல் பூரி


ராகி, நிலக்கடலை மற்றும் சில சிறுதானியங்களுடன், சிறியதாக நறுக்கிய உருளை, தக்காளி வெங்காயம் போன்ற பச்சைக் காய்கறிகளைக் கலக்கவும். இதனுடன் சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உண்ணலாம். தேநீருடன் சாப்பிடுவதற்கு உகந்தது. கொழுப்பு குறைவான ஸ்நாக்ஸாக இதைச் சாப்பிடலாம்.


குதிரைவாலிக் கஞ்சி


காலை ஃபிரேக்ஃபாஸ்ட்டுக்கு மிகச் சிறந்த உணவு இது. குதிரைவாலி அரிசி, வாழைப்பழம் கலந்து இதனைச் செய்யலாம். சிறிதுநேரத்தில் சுவையான கஞ்சி ரெடி. 


பாஜ்ரா அரிசி உப்புமா


உப்புமா தப்புமா! என உப்புமா அலர்ஜி கொண்டு புலம்புவர்களையும் சாப்பிட வைக்கும் இந்த ரெசிப்பி. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய உப்புமா இது.


பாஜ்ரா டார்ட்லெட் ஃப்ரூட் சாலட்


லெமன் டார்ட் மட்டுமே சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு இது கொஞ்சம் மாறுபட்ட ரெசிபியாக இருக்கும்.  பாஜ்ரா அரிசி கொண்டு செய்யப்படும் டார்ட்லெட்டின் மீது பழக்கலவையை வைத்து அதன் மீது கஸ்டர்ட் க்ரீம் கலந்து சாப்பிடலாம். காண்டினெண்ட்டல் உணவுகளே நிச்சயம் இதனிடம் தோற்றுப் போகும். 


ஜோவர் மெட்லி


ஜோவர் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்நாக்ஸ் சிறுதானிய ரெசிப்பிகளிலேயே புதுமையானது.ஜோவர் விதைகளுடன், சோளம், கடலை ஆகியவற்றைக் கலந்து இந்த ரெசிபியைத் தயாரிக்கலாம். பகல் பொழுதில் பொரி சாப்பிடுவது போரடித்துப் போய்விட்டது என்றால் இந்த ரெசிபி கைகொடுக்கும். 



சிறுதானியத்தை கொண்டு அரிசி வடித்துச் சாப்பிட மட்டும்தான் முடியும் என அதனை ஒதுக்குபவர்களுக்கு இந்த ரெசிப்பிக்கள் ஆபத்துதவி. சாதாரண அரிசி பருப்பு இத்யாதிகளைப் போலச் சமைப்பதற்கு நேரம் எடுக்காமல் சீக்கிரமே இதில் சமைத்துவிட முடியும் என்பது இதில் ஹைலைட். மற்றொரு பக்கம், எனக்கு இது பிடிக்காது என நோயாளிகள் ஒதுக்கவும் மாட்டார்கள். நீரிழிவு, புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அவர்களக்கு நோயாளி என்கிற உணர்வை ஏற்படுத்தாமல் சுவையான உணவை இப்படிச் செய்து தருவதால் அவர்களை மனரீதியாகவும் பாதுக்காப்பாக வைத்திருக்கும். உடல் ரீதியாகவும் அவர்களது செரிமானத்தை எளிதாக்கும். இதில் ஃபைபர் சத்து அதிகம் இருப்பதால் உடல்பயிற்சி மேற்கொள்பவர்கள் இதனை தாராளமாக தினசரி உணவாக உட்கொள்ளலாம்.