ஆண் ஒருவர் தனது மனைவியுடன் மதிய நேரத்தில் உடலுறவு கொண்ட பிறகு தனது நினைவாற்றலை இழந்ததாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஐரிஷ் மெடிக்கல் ஜர்னலின் மே மாத பதிப்பில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உடலுறவு முடிந்து 10 நிமிடங்களுக்குப் பிறகு 66 வயது ஆண் அம்னீஷியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும் நபரான இவர் மறதி நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 


ஆய்வு


ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியுடன் உடலுறவு செய்த போது அந்த நபர் இதேபோன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டதாக அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. லிமெரிக் பல்கலைக்கழக மருத்துவமனையின் நரம்பியல் துறையின் மருத்துவர்கள் கூறுகையில், உடலுறவு மேற்கொள்ளும்போது, ட்ரான்சியண்ட் குளோபல் அம்னீஷியாவை (TGA) தூண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது.


'ரிகரெண்ட் போஸ்ட்கோய்டல் டிரான்சியன்ட் அம்னீசியா அசோசியேட்டட் வித் டிஃப்யூஷன் ரெஸ்ட்ரிக்ஷன்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், உடலுறவுக்குப் பிறகு முந்தைய இரண்டு நாட்களின் நினைவாற்றல் எப்படி மறைகிறது என்பதை விவரிக்கிறது.



என்ன நடந்தது?


"சம்பவத்தன்று மதியம், அவர் நினைவாற்றல் தொந்தரவு ஏற்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டார். உடலுறவு முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு, அவரது தொலைபேசியில் தேதியைப் பார்த்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ந்த அவருக்கு, நேற்றைய தினம் தனது திருமண ஆண்டு விழா என்பது ஞாபகம் வந்துள்ளது. தனது திருமண ஆண்டு விழாவை முந்தைய நாள் கொண்டாட மறந்துவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார்" என்று ஆய்வு கூறியது. மேலும் அந்த ஆய்வில், "ஆனால், அவர் தனது திருமண நாளை தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் முந்தைய நாளில்தான் கொண்டாடி இருக்கிறார். அவரது நீண்டகால நினைவகம் அப்படியே இருந்தது, ஆனால் அவருக்கு அந்த காலை அல்லது முந்தைய இரவு நடந்த எதுவும் நினைவில் இல்லை." என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



பரிசோதனை அறிக்கை


"அந்த நபர் தனது மனைவி மற்றும் மகளிடம் அன்று காலை மற்றும் முந்தைய நாள் நடந்தவை குறித்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பரிசோதனை செய்துள்ளனர். அவரது நரம்பியல் பரிசோதனை முற்றிலும் இயல்பானதாக இருந்தது." என்று ஆய்வு மேலும் கூறுகிறது.


காரணம் என்ன?


TGA ஏற்பட்டதன் காரணம் தெரியவில்லை, இருப்பினும், திடீர் நினைவாற்றல் இழப்பு மற்றும் ஒற்றைத் தலைவலி அல்லது தீவிர உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. சூடான அல்லது குளிர்ந்த நீரில் திடீரென மூழ்குவது, உணர்ச்சி மன அழுத்தம், கடுமையான வலி ஏற்பட்டால் இந்த பாதிப்பு வரலாம். அல்லது, மருத்துவர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தது போல உடலுறவும் காரணமாகலாம். TGA 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் மிகவும் பொதுவாக ஏற்படும் விஷயமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.