சென்னையில் அதிநவீன தோல் சிகிச்சை சிறப்பு மையத்தை (Luxury Derm Aesthetic Clinic) சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல சிறப்பு விருந்தினர்கள் திறந்து வைத்தனர். 


தோல் நோய்களுக்காக மட்டுமின்றி, தோல் அழகியலுக்காக வெளிநாடுகளில் மட்டுமே இருந்த வந்த அதிநவீன தோல் சிகிச்சை மையங்கள் தற்போது சென்னையிலும் வரத் தொடங்கியுள்ளன. இத்தகைய சிறப்பு மையங்களில், தோல் அழகியல் சிகிச்சை மூலம் சரும பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய கிளினிக் ஒன்றுதான், சென்னை அபிராமபுரத்தில் பல சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுகூடி தொடங்கி வைத்தனர். 


உலகின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிறந்த சரும மற்றும் முடி பராமரிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என அர்மேனியா நாட்டில் பயிற்சி பெற்றவரும், இந்த கிளினிக்கின் தலைமை மருத்துவருமான ஆண்ட்ரியா குருநாதன் தெரிவித்தார்.  


மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சொந்த காலில் நிற்கும் மன உறுதியுடன் அழகுக்கலை பயிற்சி பெற்ற பெண் நிபுணர்கள் இங்கு பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகை ராதிகா, செய்தியாளர்களைச் சந்தித்த போது, "சருமப் பாதுகாப்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான்” என்று தெரிவித்தார். மேலும்,  ”இந்த காலத்தில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் அழகாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக, ஆண்கள்  செய்கின்ற முயற்சியெல்லாம்  எக்கச்சக்கமாக இருக்கிறது” என நகைச்சுவையாக குறிப்பிட்டவர், தாம் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.  


அதேபோல், நிகழ்ச்சியில்  தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசிய சென்னை மாநகராட்சி ஆணையரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவருமான ராதாகிருஷ்ணன், ”சுகாதார தலைநகரமாக இருக்கும் சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுபோன்ற தோல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற சிறப்பு மருத்துவமனைகள் வருவது வரவேற்கக்கூடியது” என்றார்.  மேலும், ”தோல் மிக, மிக முக்கியமானது  என்பதை உணர்ந்து, அதற்கேற்ப பராமரிக்க வேண்டும் என்பதுடன், பிரச்சினைகள் ஏற்பட்டால் சிகிச்சைகள் பெறுவது முக்கியம்” என்றும் குறிப்பிட்டார். 


இந்த திறப்பு விழாவில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் ராதாகிருஷ்ணன், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருடன், திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ஐடியல் பீச் ரிசார்ட் உரிமையாளர்  போஸ், நந்தகுமார் ஐஆர்எஸ், பிரியா தயாநிதி மாறன், இணை ஆணையர் ரம்யா பாரதி, இலங்கை வனத்துறை அமைச்சர் பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.