தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் அஜித்குமார். இவரது வீரம் படத்தில் வில்லனாக நடித்தவர் அதுல் குல்கர்னி. இவர் இந்தியில் மிகப்பெரிய நடிகராக உலா வருகிறார்.
பகல்ஹாம் தாக்குதல்:
காஷ்மீரில் கடந்த 22ம் தேதி பகல்ஹாமில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா தக்க பதிலடி அளித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் அதுல் குல்கர்னி காஷ்மீருக்குச் சென்றுள்ளனர்.
நமது காஷ்மீர்:
நடிகர் அதுல் குல்கர்னி கூறுகையில், "ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கு 90 சதவீத முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று படித்தேன். பயங்கரவாதிகள் காஷ்மீருக்கு வர வேண்டாம் என்று கூறும் செய்தி இது. இது நடக்கப்போவதில்லை.
இது நமது காஷ்மீர், நமது நாடு, நாம் இங்கு வருவோம். பயங்கரவாதிகளின் சித்தாந்தத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய பதில் இதுதான். மும்பையில் இருந்துகொண்டு இந்தச் செய்தியை என்னால் கொடுக்க முடியவில்லை, அதனால் நான் இங்கு வந்தேன். என்னால் வர முடிந்தால், நாட்டின் பிற பகுதிகளும் இங்கு வரலாம். நாம் இங்கு வர வேண்டும், பயப்படக்கூடாது.."
இவ்வாறு அவர் கூறினார். அதுல் குல்கர்னி தமிழில் மாதவனின் ரன், சிம்புவின் மன்மதன், ரவி கிருஷ்ணாவின் கேடி, தனுஷின் பொல்லாதவன், அஜித்தின் ஆரம்பம், வீரம், நகுலின் வல்லினம் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.
கொந்தளிப்பில் இந்தியா:
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பொதுமக்கள் மீது நேரடியாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இதுவே ஆகும். இது ஒட்டுமொத்த இந்தியாவையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறவும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நதிநீரை நிறுத்தியும் இந்தியா உத்தரவிட்டிருப்பதுடன் எல்லையிலும் படைகளை தயார் நிலையில் இந்தியா வைத்துள்ளது.