ஒரு மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். அவ்வாறாக 8 மணி நேரம் தூங்க முடியாவிட்டாலும் கூட 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தது 2 நாள்பட்ட வியாதியாவது தொற்றிக் கொள்ளும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்கள் அவர்கள் 50வது வயதை எட்டும் போது நிறைய நோய்க்கு ஆளாகின்றனர் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி யுஎல்சி ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதேபோல் அவர்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது. பிஎல்ஓஎஸ் மெடிசின் என்ற மருத்துவ இதழில் தான் முதன்முதலில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அதிகரிக்கும் நோய்கள்:
முன்பெல்லாம் ஒரு நபருக்கு ஒரு பெரும் நோய் ஏற்படும். ஆனால் இப்போது மக்களின் வாழ்க்கை முறையால் வாழ்வியல் சார்ந்த நோய்கள் பெருகிவருகின்றன. அதனால் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேலும் பல நோய்கள் ஏற்படுத்தும் மல்டி பார்பிடிட்டி நிலை உருவாகிறது. இது சுகாதாரத்துறைக்கே பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. காரணம் ஒரே நபருக்கு பல நோய்கள் உருவாகும்போது அதனால் மருத்துவ சேவை மீதான சுவை கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்த தூக்கம் சர்க்கரை வியாதி, புற்றுநோய், இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
இந்த ஆய்வுக்காக 7000 ஆண் மற்றும் பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் 50, 60 மற்றும் 70 வயதில் இருக்கின்றனர். இவர்களில் பலரும் 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவதால் மல்டிபார்டிட்டி பிரச்சனைகளை சந்தித்தவர்கள்.
பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக மனிதர்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இரவு நேரங்களில் நிலவும் வெப்பம் மிகுந்த சூழலால், தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதாக ஜப்பான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
நன்றாக தூங்க என்ன செய்ய வேண்டும்?
இரவில் நன்றாக தூங்க வேண்டுமென்றால் தூக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். நாம் தூங்கும் அறை சுத்தமாக, இருள் நிறைந்ததாக, காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேஎண்டும். இரவு தூங்கும் முன் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் தூங்கும் முன் ஹெவியான உணவைத் தவிர்க்க வேண்டும். பகலில் சூரிய ஒளி உடலில் பட வேண்டும். நல்ல உடற்பயிற்சி வேண்டும். இவையெல்லாம் இருந்தால் தான் இரவில் நன்றாக தூக்கம் வரும்.
பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசரகதியான வாழ்கையில், அதே வேகத்தில் பல நோய்களும் நம்மை வந்து ஒட்டிக்கொள்கின்றன. அதற்கு காரணங்களாக முறையற்ற சாப்பாடு, உடற்பயிற்சியின்மை என பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணியாக பார்க்கப்படுவது தூக்கமின்மை. இந்தப்பிரச்னைக்கு மனஅழுத்தம், கவலை, சொந்த வாழ்கை மற்றும் தொழில் வாழ்கை தொடர்பான வேலைகளால் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டே இருப்பது உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. இன்சோம்னியா என்ற அழைக்கப்படும் இந்தப்பிரச்னை தொடர்ந்து இருக்கும் போது அது நாள்பட்ட பிரச்சனையாக மாறிவிடுகிறது.