ஆலிவ் ஆயில் நம் நாட்டில் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்து இப்போது அப்பர் மிடில் க்ளாஸ் மக்கள் வரை வியாபித்துவிட்டது. ஆலிவ் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுவது தான் இந்த ஆலிவ் எண்ணெய். இதனை அழகுசாதன பொருட்கள், மருந்துகள், சோப் என பலவற்றிலும் பயன்படுத்துகின்றனர். சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடன்ஸ்ட்ஸ் அதிகமாக இருப்பதால் இது சமையலுக்கு சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு ரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும்


ஆலிவ் ஆயிலில் மோனோசேச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம், இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்கள் மற்றும் இதய பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு 6% முதல் 10% வரை குறையும். ஆலிவ் ஆயில் எக்ஸ்ட்ரா வெர்ஜின், வெர்ஜின், ரீஃபைண்ட் என்று மூன்று வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் தான் உடலுக்கு அதிக நன்மைகள் சேர்ப்பது என்று கண்டறியப்பட்டுள்ளது.


ஆலிவ் ஆயிலில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளன. இயற்கையாகவே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளமாக கட்டமைக்கப்பட இது உதவும். இதில் உள்ள ஓலியோசாந்தல் எனும் வேதிப் பொருள் இபுப்ரோபென் போல் செயல்படவல்லது.
 
ஆரோக்கியமான கொழுப்புகள்: 


ஆலிவ் ஆயிலில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு 73% உள்ளது. ஓலிக் ஆசிட் புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்கள் மீது நேர்மறை விளைவை ஏற்படுத்தும்.


ஆரோக்கியமான உயர் கொழுப்பு கொண்ட உணவுகள் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள் அவற்றில் உள்ள கொழுப்பின் உள்ளடக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, ஆரோக்கியமான உயர் கொலஸ்ட்ரால் உணவுகளை மிதமான அளவில், உட்கொள்ளலாம். எனினும் அவற்றை உட்கொள்ளும் முன்பு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம்: 


எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் அதிகமான அளவு வைட்டமின் இ, வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதய நாள நோய்களும், டெமன்சியா, சிலவகை புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது.
 
ஆலிவ் ஆயிலால் உடல் எடை கூடாது:


பொதுவாக எண்ணெய் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கூற முக்கியக் காரணம் அதனால் உடல் எடை கூடலாம் என்பதே. ஆனால் ஆலிவ் ஆயில் பயன்படுத்தும் போது உடல் எடை கூடாது எனக் கூறப்படுகிறது. மெடிட்டெரேனியன் உணவில் ஆலிவ் ஆயில் அதிகம். இது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இதனைப் பயன்படுத்தலாம்.


இதயம் காக்க ஆலிவ் ஆயில்:


எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் பயன்படுத்தும் போது இதய நோய்களை தடுக்க முடியும். இதற்குக் காரணம் இதில் உள்ள எல்டிஎல் கட்டுப்படுத்தும் குணம். கொலஸ்ட்ராலில் லிப்போபுரோட்டின்கள் எனப்படும் இரண்டு வகையான புரதங்கள் உள்ளன. இந்த லிப்போபுரோட்டீன்களில் ஒன்று LDL (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) என்று அழைக்கப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால். மற்றொன்று HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்). இது பொதுவாக "நல்ல" கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது.


அதேபோல் ஆலிவ் ஆயில் அல்சைமர்ச்ஸ் நோயை தள்ளிப்போடும். இது பீட்டா அமிலாய்ட் ப்ளேக்ஸ் மூளை செல்களில் உருவாகாமல் தடுக்கிறது.