புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வே நம் சமூகத்தில் இப்போதுதான் மெல்ல மெல்ல மேலோங்குகிறது. அதிலும் குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. குழந்தைகளைத் தாக்கும் ரெட்டினோபிளாஸ்டோமா என்ற அரிய வகை புற்றுநோய் பற்றிய புரிதல் ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சரி ரெட்டினோபிளாஸ்டோமா யாரைத் தாக்கும், எப்படி ஏற்படுகிறது, அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை முறை தான் என்ன என்று 360 டிகிரி பார்வையில் காண்போம்.


ரெட்டினோபிளாஸ்டோமா என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான கண் புற்றுநோயாக இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மக்களிடம் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே Advanced Eye Centreஇல் உள்ள கண் மருத்துவத் துறையானது கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் மூன்று நாடகள் ரெட்டினோபிளாஸ்டோமா கிளினிக்கை நடத்தி வருகிறது.


உலக ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ விழிப்புணர்வு வாரம் மே 15 முதல் மே 21 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த துறை நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. ரெட்டினோ கிளினிக்கில்  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொதுமக்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்வாக இது அமையவிருக்கிறது.


சரி ரெட்டினோபிளாஸ்டோமா என்றால் என்ன?


குழந்தையின் ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ இந்த வகை புற்றுநோய் ஏற்படலாம். இந்த நோய் பரம்பரையாக வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், நிச்சயமாக கண் பார்வை இழப்போ, உயிருக்கு ஆபத்தோ நேராது என்று கூறப்படுகிறது.



ரெட்டினோபிளாஸ்டோமா அறிகுறிகள் என்ன?


இதன் அறிகுறிகளை ஃப்ளாஷ் லைட் பிரச்சினை, மாறு கண், கண் பார்வை திறனில் பாதிப்பு ஆகியன முக்கிய கவனிக்கத்தக்க அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.


White Reflex in the eye: புகைப்படம் எடுத்துக் கொள்ள யாருக்குத் தான் பிடிக்காது. அப்படியாக புகைப்படம் எடுக்கும்போது கண்களில் பிளாஷ் ஒளிப்பட்டு, சிகப்பு நிறத்தை பிரதிபலிப்பதற்கு பதிலாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக காட்சியளித்தால், அல்லது குழந்தை அதை உங்களிடம் குறிப்பிட்டால் கவனிக்க வேண்டும்.
Squinting: கண்ணின் மணி இடம் மாறி இருக்கும். அதாவது மூக்கை நோக்கியோ அல்லது காதை நோக்கியோ இருக்கக்கூடும்.
Eye vision damage: கண் பார்வை சரியாக தெரியாது. கண்கள் சிகப்பு நிறத்தில் மாறலாம். அதிக வலியைத் தரலாம்.


ரெட்டினோபிளாஸ்டோமா கண்டறிவது எப்படி?
கண் அல்ட்ரா-சோனோகிராபி, ஃபண்டஸ் பரிசோதனை ஆகிய நடைமுறைகள் மூலம் இந்நோயை உறுதிப்படுத்தலாம். மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்(எம்ஆர்ஐ), சிஸ்டமிக் ஸ்டேஜிங் இன்வஸ்டிகேஷன்ஸ் (எலும்பு மஜ்ஜை பயாப்ஸி, சிஎஸ்எஃப் மற்றும் முழு உடல் PET ஸ்கேன்) ஆகியவை மூலமும் இந்நோய் தீர்மானிக்கப்படுகிறது.


ரெட்டினோபிளாஸ்டோமா தடுப்பது எப்படி?


ரெட்டினோபிளாஸ்டோமா சிகிச்சைக்கு பல ஒழுங்குமுறை அணுகுமுறை தேவைப்படுகிறது. இது போன்ற குழந்தைகளை கவனிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. முழுமையான மருத்துவ பரிசோதனை, நோயின் வகைப்பாடு கண்டறிந்த பிறது, அதற்கேற்ற சிகிச்சை வழங்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனியாக சிகிச்சையளிக்கப்படும்.


சிகிச்சைகள்..


இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கீமோதெரபியானது நரம்பு வழியாகவோ அல்லது உள்-தமனி மூலமாகவோ, குழந்தை புற்றுநோயியல் நிபுணரால் வழங்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான சிகிச்சை முறையாகும். கட்டி கட்டுக்குள் வரும் வரை வாரந்தோறும் அல்லது மாதாந்திர அடிப்படையில் சிகிச்சை முறையில் மாற்றம் மேற்கொள்வது அவசியமாகிறது.


வாழ்நாள் பரிசோதனை அவசியம்:


சிகிச்சை முடிந்த பிறகு, நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதையும், சிகிச்சையால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் வேண்டும். நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பரிசோதனையும், பெற்றோருக்கு மரபணு ஆலோசனையும் தேவைப்படுகிறது.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,500-2,000 குழந்தைகள் ரெட்டினோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்படுகின்றனர்.